இலங்கைக்கு சர்வதேச நாணய நிதிக்குழு ஜூன் 20-ந்தேதி வருகை - ரணில் விக்கிரமசிங்கே தகவல்

இந்த மாத இறுதி வரை நாட்டிற்கு தேவையான எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்ய முடியும் என ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-15 07:42 GMT

கொழும்பு,

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அந்நாட்டு மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையை சமாளிக்க அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் உதவியை நாடியுள்ளார்.

ஏற்கனவே இந்தியா சார்பில் இலங்கையின் நிதி நெருக்கடியை சமாளிக்க கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் அந்நாட்டு மக்களுக்கு தேவையான மருந்து, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இந்திய அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, இலங்கையில் இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும், மேற்கொண்டு எரிபொருள் வாங்குவதற்கு இந்திய அரசு மேலும் கடன் உதவி அளிக்க வேண்டும் எனவும் ரணில் விக்கிரமசிங்கே கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் இலங்கை தலைநகர் கொழும்புவில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரணில் விக்கிரமசிங்கே, தற்போதைக்கு ஒரு வாரத்திற்கு மட்டுமே எரிபொருள் கையிருப்பு இருப்பதால், அவற்றை மருத்துவமனைகள், உணவகங்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

எரிபொருள் நிரப்பிய 3 கப்பல்கள் நாளை இலங்கைக்கு வர உள்ளதால், இந்த மாத இறுதி வரை நாட்டிற்கு தேவையான எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியாவிடம் இருந்து கடன் கிடைக்கப்பெற்றதும், அடுத்த 4 மாதங்களுக்குத் தேவையான எரிபொருளை பெற முடியும் என்று கூறியுள்ள அவர், நிதி நெருக்கடியை தீர்க்க சர்வதேச நாணய நிதியத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும், அதன்படி வரும் 20-ந்தேதி நாணய நிதிக்குழு இலங்கை வர உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்