இலங்கைக்கு ரூ.24 ஆயிரம் கோடி கடனுதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல்

இலங்கையில் கடந்த ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து, தட்டுப்பாடும் நிலவியது.

Update: 2023-03-21 09:32 GMT

இலங்கையில் கடந்த ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து, தட்டுப்பாடும் நிலவியது. அன்றைய செலாவணி இருப்பு குறைந்ததால் அரசு திணறியது. மக்கள் போராட்டத்தால் ஆட்சி அதிகாரத்தில் இருந்து ராஜபக்சே குடும்பத்தினர் ராஜினாமா செய்த பிறகு புதிய அதிபராக பதவியேற்ற ரணில் விக்ரம சிங்கே பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தார். இலங்கைக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் உதவிகள் செய்தன. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை கடனுதவி கேட்டது.

இது தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசு பேச்சு வார்த்தை நடத்தி வந்தது. இந்த நிலையில் இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.24 ஆயிரம் கோடி) கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்து அறிவித்து உள்ளது. முதல் தவணையாக 333 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படுகிறது. 2027-ம் ஆண்டு வரை பல தவணைகளாக கடன் அளிக்கப்படும். இதுதொடர்பாக இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே கூறும்போது, "பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் பாதையை எதிர் நோக்கி நாங்கள் இருக்கும் நிலையில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் நட்பு நாடுகள் வழங்கிய ஆதரவுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்" என்றார். சர்வதேச நாணய நிதியம் கூறும்போது, "நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை மீண்டுவர இந்த நிதி உதவும்" என்று கூறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்