இந்தோனேசியாவில் முதல் இந்துப் பல்கலைக்கழகம் உருவாக்கம்

பாலி தீவில் இந்துக்கள் அதிகம் வசிக்கின்றனர்.

Update: 2024-03-05 03:01 GMT

பாலி,

மக்கள் தொகையில் உலகின் 7வது பெரிய நாடாக திகழும் இந்தோனேசியாவில் 86% மேல் இஸ்லாமியர்கள் வசித்து வருகின்றனர். அதிக இஸ்லாமிய மக்கள் தொகையை கொண்ட நாடு என்ற பெருமையும் இந்தோனேசியாவுக்கு உள்ளது. 17,000க்கும் அதிகமாக தீவுகளை உள்ளடக்கிய இந்தோனேசியா உலகின் மிகப்பெரிய தீவு நாடாகவும் விளங்கி வருகிறது. இந்தோனேசியாவின் தலைநகராக ஜகார்த்தா உள்ளது. இது ஜாவா மாகாணத்தில் அமைந்துள்ளது.

இந்தநிலையில் அதன் கட்டுப்பாட்டில் உள்ள பாலி தீவில் இந்துக்கள் அதிகம் வசிக்கின்றனர். உலகளவில் சுற்றுலாமையமாக விளங்கும் இந்த பாலித்தீவில் கடந்த 1993-ம் ஆண்டு இந்து மத ஆசிரியர்களால் கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டது. அதன்பின்னர் கடந்த 1999-ம் ஆண்டு இந்து மத அரசு கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது. பாலி தீவின் தலைநகர் டென்பசாரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்த இந்தக் கல்லூரி கடந்த 2004-ம் ஆண்டு இந்து தர்ம அரசு நிறுவனமாக (ஐஎச்டிஎன்) மீண்டும் தரம் உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், இந்நிறுவனத்துக்கு பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கும் ஆணையில் அதிபர் ஜோகோவி விடோடோ கையெழுத்திட்டுள்ளார். அதன்படி, இந்தோனேசியாவின் முதல் இந்துப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டுள்ளது. அதிபரின் ஒழுங்குமுறை அதிகாரத்தின் கீழ் இந்தப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய இந்து பல்கலைக்கழகத்துக்கு 'ஐ கஸ்தி பகஸ் சுக்ரிவா ஸ்டேட் இந்து யுனிவர்சிட்டி (யுஎச்என்)' என்று பெயர்சூட்டப்பட்டுள்ளது. இந்தப் பல்கலைக்கழகம் இந்து உயர் கல்விக்கான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி செயல்படும்.

இதன் மூலம் ஐ.எச்.டி.என். நிறுவனத்தில் படிக்கும் மாணவர்கள் உடனடியாக யு.எச்.என். மாணவர்களாக மாற்றப்படுவார்கள். ஐ.எச்.டி.என். நிறுவனத்தின் சொத்துகள், ஊழியர்கள் உள்பட அனைத்தும் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் என்று அதிபரின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்