அமெரிக்காவின் எச்-1பி விசாக்களை பெறுவதில் இந்தியர்கள் முதலிடம்
பல ஆண்டுகளாக 70 சதவீதத்துக்கு அதிகமாக எச்-1பி விசாக்களை இந்தியர்கள் தொடர்ந்து பெற்று வருகிறார்கள்.;
வாஷிங்டன்,
அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள் மற்றும் தொழில்களில் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்த எச்-1பி விசா வழங்கப்படுகிறது. இந்த எச்-1பி விசாவை பெற்றவர்களில் இந்தியர்கள் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளனர். குறிப்பாக தகவல் தொழில்நுட்பத்துறையில் பலர் எச்-1பி விசா மூலம் அமெரிக்காவுக்கு வேலைக்கு செல்கிறார்கள்.
அமெரிக்காவில் 2022-ம் நிதியாண்டில் அமெரிக்க குடியுரிமை சேவைகள் துறை மூலம் 4.41 லட்சம் எச்-1பி விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 3 லட்சத்து 20 ஆயிரத்து 791 விசாக்கள் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. இது 72.6 சதவீதமாகும். இதற்கு அடுத்தபடியாக சீனாவை சேர்ந்த 55 ஆயிரத்து 38 பேரும் (12.5 சதவீதம்), கனடாவை சேர்ந்த 4 ஆயிரத்து 235 பேரும் (ஒரு சதவீதம்) எச்-1பி விசா பெற்றுள்ளனர்.
ஒட்டுமொத்தமாக 2022-ம் நிதியாண்டில் எச்-1பி விசா வழங்கப்படும் எண்ணிக்கை 8.6 சதவீதம் அதிகரித்துள்ளது. 2021-ம் நிதியாண்டில் 3.01 லட்சம் இந்தியர்கள் எச்.1பி விசா பெற்ற நிலையில், கடந்த நிதியாண்டில் 3.20 லட்சம் பேர் விசாக்கள் பெற்றுள்ளனர்.
இதன் மூலம் அமெரிக்காவில் எச்-1பி விசா பெறுவதில் இந்தியர்கள் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்கள். பல ஆண்டுகளாக 70 சதவீதத்துக்கு அதிகமாக எச்-1பி விசாக்களை இந்தியர்கள் தொடர்ந்து பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டுக்கு ஆண்டு இந்தியர்கள் எச்-1பி விசா பெறுவது உயர்ந்தபடி இருக்கிறது. அதேவேளையில் சீனர்கள் எச்-1பி பெறுவது 0.1 சதவீதம் மட்டுமே அதிகரித்து இருக்கிறது.