இந்தியர்களுக்கு வெளிநாட்டு வேலை மீதான மோகம் குறைந்து வருகிறது - ஆய்வறிக்கையில் தகவல்

இந்தியர்களுக்கு வெளிநாட்டு வேலை மீதான மோகம் குறைந்து வருவதாக அமெரிக்க நிறுவனம் நடத்திய ஆய்வு அறிக்கை கூறுகிறது.

Update: 2024-05-03 17:52 GMT

பாஸ்டன் கன்சல்டிங் குரூப் என்ற புகழ்பெற்ற அமெரிக்க ஆய்வு நிறுவனம் 'சர்வதேச புலம் பெயர்வுகளின் போக்குகள்' என்ற தலைப்பில் ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. 188 நாடுகளில் 1.5 லட்சம் ஊழியர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வு அடிப்படையில் ஒரு அறிக்கையை தயாரித்து வெளியிட்டுள்ளது.

அதன்படி வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விருப்பம் தெரிவித்துள்ள இந்தியர்களின் விகிதம் 2018-ல் 78 சதவீதமாக இருந்து 2023-ல் 54 சதவீதமாக சரிந்துள்ளதாக அந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது. இவர்களில் 59 சதவீதம் பேர் தாய்நாட்டின் மீதான உணர்வு ரீதியான பற்றின் காரணமாக வெளிநாடு செல்ல விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளனர். அதே நேரம் உலக அளவில் தாய்நாட்டின் மீதான பற்று காரணமாக வெளிநாடு செல்ல விரும்பாதவர்களின் விகிதம் 33 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதே போல் வெளிநாடுகளில் பணிபுரிய ஆர்வம் காட்ட என்ன காரணம் என்ற கேள்விக்கு பொருளாதார ரீதியான காரணங்களை 64 சதவீதத்தினர் முன்வைத்துள்ளனர். வேலைகளின் தரத்தை 65 சதவீதத்தினரும் வாழ்க்கை தரம் மற்றும் பருவநிலையை 54 சதவீதத்தினரும் காரணமாக தெரிவித்துள்ளனர். அதேபோல் வெளிநாடு செல்பவர்கள் விரும்பும் நாடுகள் பட்டியலில் 2020-ல் முதலிடத்தில் இருந்த கனடா 2023-ல் 3-வது இடத்திற்கு சென்றுள்ளது.

2020-ல் 3-வது இடத்தில் இருந்த ஆஸ்திரேலியா 2023-ல் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. 2018 வரை முதலிடத்தில் இருந்த அமெரிக்கா கடந்த 4 ஆண்டுகளாக இரண்டாம் இடத்தில் தொடர்கிறது. பிரிட்டன் 4-வது இடத்திலும், ஜெர்மனி 5-வது இடத்திலும், ஜப்பான் 6-வது இடத்திலும் உள்ளன. இந்த பட்டியலில் 2018-ல் 54-வது இடத்திலிருந்த இந்தியா 2023-ல் 42-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்