அமெரிக்காவில் இந்திய பெண் சுட்டுக்கொலை.. இந்திய வம்சாவளி வாலிபர் வெறிச்செயல்

அமெரிக்காவுக்கு படிக்க வந்த ககன்தீப் கவுர், சமீபத்தில் தனக்கு படிப்பில் சிக்கல் இருப்பதாக ஜஸ்வீர் கவுரிடம் கூறியிருக்கிறார்.

Update: 2024-06-17 12:19 GMT

வாஷிங்டன்:

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தின் கார்டெரெட் பகுதியில் வசித்து வந்தவர் ஜஸ்வீர் கவுர் (வயது 29). இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இவர், கார்டெரெட் பகுதியில் உள்ள அமேசான் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அவரது கணவர் லாரி டிரைவராக வேலை பார்க்கிறார்.

கடந்த புதன்கிழமை காலையில், இவரது வீட்டிற்கு உறவுக்கார பெண் ககன்தீப் கவுர் (வயது 20) வந்திருந்தார். அப்போது, 19 வயது நிரம்பிய வாலிபர் ஒருவர், ககன்தீப் கவுரை வீட்டிற்கு வெளியே சந்தித்து பேசி உள்ளார். சிறிது நேரத்தில் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ககன்தீப் கவுர், உதவிக்கு ஜஸ்வீர் கவுரை அழைத்துள்ளார். அவர் வந்து பிரச்சினையில் தலையிட்டு ககன்தீப் கவுருக்கு ஆதரவாக பேசி உள்ளார். அப்போது ஆத்திரமடைந்த அந்த வாலிபர், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் ஜஸ்வீர் கவுரை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளார். ககன்தீப் கவுரையும் சுட்டுள்ளார்.

இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி ஜஸ்வீர் கவுர் உயிரிழந்தார். ககன்தீப் கவுருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. தாக்குதல் நடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், அவர் வாஷிங்டனின் கென்ட் நகரில் வசித்து வரும் கவுரவ் கில் (வயது 19) என்பதும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மாணவர் விசாவில் அமெரிக்காவுக்கு படிக்க வந்த ககன்தீப் கவுர், சமீபத்தில் தனக்கு படிப்பில் சிக்கல் இருப்பதாக ஜஸ்வீர் கவுரிடம் கூறியிருக்கிறார்.

ஆனால் அவருக்கும் கவுரவ் கில்லுக்கும் என்ன தொடர்பு? ஏன் இருவருக்கிடையே சண்டை ஏற்பட்டது? என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இருவரும் இதற்கு முன்பு இந்தியாவில் ஒரே கல்வி நிறுவனத்தில் படித்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்