சிங்கப்பூர் சிறையில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு தூக்கு
சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தில் வழக்கில் சிக்கிய இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்க்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.;
சிங்கப்பூர்,
சிங்கப்பூரில், மலேசியாவை சேர்ந்த இந்திய வம்சாவளியான கல்வந்த் சிங், கடந்த 2013-ம் ஆண்டு, போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கினார். 60.15 கிராம் டைமார்பின் உள்பட 120.9 கிராம் போதைப்பொருள் கடத்தியதாக அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, 2016-ம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர் ஜூலை 7-ந் தேதி தூக்கில் போடப்படுவார் என அறிவிக்கப்பட்டது.
இதேபோன்று சிங்கப்பூரை சேர்ந்த நோராஷாரீ கோயஸ் என்பவருக்கும் போதைப் பொருள் கடத்தலில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவரையும் தூக்கில் போட முடிவு செய்யப்பட்டிருந்தது.
கல்வந்த் சிங்கை தூக்கில் போடுவதில் இருந்து தடுப்பதற்கு கோலாலம்பூரில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் முன்பாக மனித உரிமை ஆர்வலர்கள் நேற்று முன்தினம் மெழுகுவர்த்தி ஏந்தி கூடி நின்று போராடினர். ஆனால் பலன் இல்லை. இந்த நிலையில், அவர்கள் இருவரும் சிங்கப்பூரில் சாங்கி சிறையில் வைத்து தூக்கில் போடப்பட்டனர்.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் நாகேந்திரன் தர்மலிங்கம் என்ற மனநிலை பாதித்த நபர் கடந்த ஏப்ரல் 27-ந் தேதி தூக்கில் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூர் சட்டப்படி, 15 கிராமுக்கு மேற்பட்ட போதைப்பொருளை கடத்துபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.