கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கு.. சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை

மல்லிகா தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டபோதும் ஆத்திரம் தணியாத கிருஷ்ணன், மல்லிகாவை அடித்து உதைத்து கடுமையாக தாக்கி உள்ளார்.

Update: 2024-04-23 06:57 GMT

சிங்கப்பூர்:

சிங்கப்பூரில் வசித்து வரும் இந்திய வம்சாவளி நபரான கிருஷ்ணன் (வயது 40), தனது மனைவிக்கு தெரியாமல் மல்லிகா பேகம் என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். வீட்டிற்கே அழைத்து வந்து அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.

2015-ம் ஆண்டு ஒருநாள் வீட்டின் படுக்கை அறையில் இருவரும் ஒன்றாக இருந்து மது அருந்தியபோது கையும் களவுமாக மனைவி பிடித்துள்ளார். கணவனை கடுமையாக திட்டியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணன், மனைவியை அடித்துள்ளார். இதனால் பயந்துபோன மனைவி, மன்னிப்பு கேட்டதால் தாக்குதலில் இருந்து தப்பியிருக்கிறார். அதன்பின்னர், போலீசில் புகார் அளித்து தனக்கு பாதுகாப்பு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். அதனால் அவரை கிருஷ்ணன் தாக்கவில்லை. அதேசமயம், மல்லிகாவுடன் தொடர்ந்து குடும்பம் நடத்தியிருக்கிறார்.

இதற்கிடையே, மல்லிகாவுக்கு வேறு சில ஆண்களுடன் தொடர்பு ஏற்பட, அவர்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார். 2018-ல் கிருஷ்ணன் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தபோதும் மல்லிகா வேறு ஆண்களுடன் நெருக்கமாக இருந்துள்ளார். இதனால் கிருஷ்ணனுக்கும், மல்லிகாவுக்கும் இடையே பிரச்சினை உருவானது. 2019ல் பிரச்சினை தீவிரமடைந்துள்ளது.

மல்லிகா தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டபோதும் ஆத்திரம் தணியாத கிருஷ்ணன், 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15 மற்றும் 16 ஆகிய இரண்டு நாட்கள் மல்லிகாவை அடித்து உதைத்து கடுமையாக தாக்கி உள்ளார். இதில் பலத்த காயமடைந்த மல்லிகா 17-ம் தேதி உயிரிழந்துள்ளார். இதையடுத்து கிருஷ்ணன், போலீசில் சரண் அடைந்துள்ளார்.

கைது செய்யப்பட்ட பிறகு, கிருஷ்ணனுக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் அவருக்கு ஒருவித மனநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த பாதிப்பு இருக்கும் நபர், சிறிய விஷயங்களுக்கும் தேவையற்ற டென்சன், கோபத்தின் உச்சிக்கு சென்று என்ன செய்வதென்றே தெரியாமல் கண்மூடித்தனமாக நடந்துகொள்வார். அப்படிப்பட்ட மனநிலை மற்றும் மது போதையில் இருந்த கிருஷ்ணன், மல்லிகாவை அடித்து துன்புறுத்தியது விசாரணையில் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட கிருஷ்ணன் மீது ஐகோர்ட்டில் கொலை வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் கடந்த வாரம் தீர்ப்பு வழங்கிய ஐகோர்ட், கிருஷ்ணனை குற்றவாளி என அறிவித்தது. நேற்று அவருக்கான தண்டனை விவரம் வெளியிடப்பட்டது. காதலியை அடித்துக் கொன்ற கிருஷ்ணனுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அவர் கைது செய்யப்பட்ட நாளில் இருந்து தண்டனைக் காலம் தொடங்கும் என்றும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்