சட்டவிரோத நுழைவு... அமெரிக்காவில் கஸ்டடியில் இருந்த இந்தியர் மரணம்

இந்தியர் மரணம் அடைந்த செய்தி, அவரது குடும்பத்தினருக்கு குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-04-18 10:50 GMT

நியூயார்க்:

இந்தியாவைச் சேர்ந்த ஜஸ்பால் சிங் (வயது 57), கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்தபோது கைது செய்யப்பட்டார். அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் கைது செய்யப்பட்ட அவர், குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறையின் கஸ்டடியில் வைக்கப்பட்டிருந்தார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பாக அட்லாண்டாவில் வைத்து விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், அட்லாண்டாவின் செயின்ட் மேரிஸ் நகரில் உள்ள தென்கிழக்கு ஜார்ஜியா சுகாதார நிலையத்தில் கடந்த 15-ம் தேதி ஜஸ்பால் சிங் மரணம் அடைந்துள்ளார். அவர் மரணம் அடைந்த செய்தி, நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திற்கும், அவரது குடும்பத்தினருக்கும் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங் மறைவுக்கான காரணம் குறித்த தகவல் வெளியாகவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகே, அவரது மரணத்துக்கான காரணம் தெரியவரும்.

1992-ல் சட்டப்பூர்வமாக அமெரிக்காவிற்கு வந்த சிங், பல ஆண்டுகளாக தனது குடியேற்ற நிலை தொடர்பான சட்ட சிக்கல்களை எதிர்கொண்டார். 1998-ல் வரை நாட்டை விட்டு வெளியேற்றும்படி குடிவரவு நீதிபதி உத்தரவிட்டார். அதன்பின்னர் தானாக வெளியேறிய சிங், கடந்த ஆண்டு அமெரிக்கா-மெக்சிகோ எல்லை வழியாக மீண்டும் நுழைய முயன்றபோது அவரை அமெரிக்காவின் சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்