லாவோஸ் நாட்டில் சைபர் குற்ற செயல்களில் ஈடுபட தள்ளப்பட்ட 47 இந்தியர்கள் மீட்பு
லாவோஸ் நாட்டில் சைபர் குற்ற செயல்களில் ஈடுபட தள்ளப்பட்ட 47 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
வியண்டியன்,
தென்கிழக்கு ஆசியாவில் தாய்லாந்து அருகே அமைந்துள்ள நாடு லாவோஸ். இந்நாட்டில் ஐ.டி. நிறுவனங்களில் வேலை உள்ளதாக கூறி இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
ஆனால், அவர்கள் சைபர் குற்ற செயல்களில் ஈடுபட தள்ளப்பட்டுள்ளனர். இவர்களை மீட்கும் நடவடிக்கையில் இந்திய தூதரகம் ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில், அந்நாட்டின் பொஹியோ மாகாணத்தில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் போலி ஐடி நிறுவனங்களில் இந்தியர்கள் 47 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் சைபர் குற்றங்களில் ஈடுபட தள்ளப்பட்டுள்ளனர்.
இது குறித்து லாவோசில் செயல்படும் இந்திய தூதரத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்நாட்டு அதிகாரிகளுடன் இந்திய தூதரக அதிகாரிகள் அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர்.
அப்போது, ஐ.டி. நிறுவனத்தில் வேலை என கூறி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் செயல்பட்ட போலி ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி சைபர் குற்ற செயல்களில் ஈடுபட தள்ளப்பட்ட 47 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களில் 30 பேர் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் எஞ்சிய 17 பேரை இந்தியாவுக்கு அனுப்பும் பணிகள் நடைபெற்று வருவதாக தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், லாவோஸ் நாட்டில் போலி வேலைவாய்ப்புகளை நம்பி இந்தியர்கள் ஏமாற வேண்டாம் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.