அமெரிக்க அதிபர் தேர்தல்... குடியரசு கட்சியின் 4வது விவாதத்தில் விவேக் ராமசாமி முன்னிலை
விவாதத்தின்போது ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி காரசாரமாக கருத்துக்களை முன்வைத்தனர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது. இதில் எதிர்க்கட்சியான குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். வேட்பாளர் போட்டியில் டிரம்புக்கு எதிராக குடியரசு கட்சி சார்பில் இந்திய வம்சாவளிகளான நிக்கி ஹாலே, விவேக் ராமசாமி உள்பட பலர் போட்டியிட ஆர்வம் தெரிவித்து களமிறங்கி உள்ளனர்.
அமெரிக்காவை பொருத்தவரை அதிபர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெறவேண்டும் என்பதால், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொது விவாதத்திலும் பங்கேற்று ஆதரவு திரட்டி வருகின்றனர். இந்த பிரசாரத்தில் ஆரம்பம் முதலே விவேக் ராமசாமிக்கு ஆதரவு பெருகி வருவதாக கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்தன.
அவ்வகையில், குடியரசு கட்சி வேட்பாளர்களுக்கான நான்காவது விவாத நிகழ்ச்சி அலபாமாவில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் விவேக் ராமசாமி, தெற்கு கரோலினாவின் முன்னாள் கவர்னர் நிக்கி ஹாலே, புளோரிடா கவர்னர் ரான் டிசாண்டிஸ் மற்றும் நியூ ஜெர்சி முன்னாள் கவர்னர் கிறிஸ் கிறிஸ்டி ஆகியோர் பங்கேற்று விவாதித்தனர். இந்த விவாதத்தில் விவேக் ராமசாமி, டிசாண்டிஸ் ஆகிய இருவரும் முன்னிலை பெற்றனர்.
விவாதத்தின்போது ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி காரசாரமாக கருத்துக்களை முன்வைத்தனர். நாட்டின் வெளியுறவுக் கொள்கையில் அவர்களுக்கிடையே உள்ள கருத்து வேறுபாடுகளை இந்த விவாதம் கோடிட்டு காட்டியது. கிறிஸ்டி மற்றும் நிக்கி ஹாலே ஆகியோர் மிகவும் மோசமான அணுகுமுறையை கடைப்பிடித்ததாக விவேக் ராமசாமி சாடினார்.
இறுதிக்கட்ட கருத்துகள்
விவாதத்தின் இறுதிக்கட்ட கருத்தை முன்வைத்த கிறிஸ்டி, முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பை தாக்கி பேசினார். அடுத்த நவம்பரில் டிரம்ப் வாக்களிக்க முடியாது, ஏனெனில் அவர் ஒரு குற்றத்திற்காக தண்டிக்கப்படுவார் என கிறிஸ்டி கூறினார்.
2023ஆம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக பதிவாகியிருந்தாலும், இந்த காலநிலை மாற்ற நெருக்கடியைத் தீர்ப்பதற்கான முயற்சிகளுக்கு எதிராக விவேக் ராமசாமி கருத்து தெரிவித்தார்.
நிக்கி ஹாலே பேசும்போது, டொனால்டு டிரம்பை தாக்கினார். நாடகம் அல்லது வெறும் வாய்ப்பேச்சு மட்டும் இல்லாமல் அரசியலை அணுகுவதாக நிக்கி ஹாலே உறுதி அளித்தார்.
புளோரிடாவில் தனது சாதனையைப் பற்றி பேசிய டிசாண்டிஸ், 'குடியரசு கட்சி மீண்டும் வெற்றிபெற நான் வழிகாட்டுவேன்' என குறிப்பிட்டார்.