இலங்கை சபாநாயகர் உடன் இந்திய தூதர் சந்திப்பு

இலங்கை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தனேவை இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே சந்தித்து பேசினார்.

Update: 2022-07-16 04:04 GMT

கொழும்பு,

இலங்கை எதிர்கொண்டு வரும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி, ஆட்சியாளர்களின் அரியணையை பறித்து வருகிறது. மக்கள் புரட்சியால் அவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில் ஏற்கனவே பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே, கடந்த மே மாதம் நடந்த மக்களின் போராட்டம் மற்றும் வன்முறையால் பதவி விலகினார். புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே ஆட்சிக்கு வந்தார். ஆனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் ரணிலுக்கு எதிராகவும் மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். இதில் கடந்த 9-ந்தேதி பெரும் கிளர்ச்சி ஏற்பட்டது.

இதனால் கடந்த 13-ந்தேதி அதிகாலையில் நாட்டை விட்டு தப்பி ஓடிய கோத்தபய ராஜபக்சே, மனைவியுடன் மாலத்தீவில் தஞ்சம் புகுந்தார். அங்கிருந்தவாறே பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை நாட்டின் இடைக்கால அதிபராக நியமித்தார்.

மாலத்தீவிலும் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு வலுத்ததால் நேற்று முன்தினம் அவர் சிங்கப்பூருக்கு தப்பிச்சென்றார். அத்துடன் அதிபர் பதவியையும் ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தனேவுக்கு இ-மெயிலில் அனுப்பி வைத்தார். இதை சபாநாயகரும் ஏற்றுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே நேற்று முறைப்படி பதவியேற்றார்.

இந்த நிலையில், இலங்கை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தனேவை இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே சந்தித்து பேசினார்.

இது தொடர்பாக இலங்கைக்கான இந்திய தூதரகம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், "இந்திய தூதர் இன்று காலை சபாநாயகரை சந்தித்தார். குறிப்பாக இந்த முக்கியமான தருணத்தில் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பை நிலைநிறுத்துவதில் பாராளுமன்றத்தின் பங்கை பாராட்டினார்.

இலங்கையில் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கு இந்தியா தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்தார்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்