காசா போர் நிறுத்தம்.. வாக்கெடுப்பை புறக்கணித்தது ஏன்..? இந்தியா விளக்கம்

இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, ஜப்பான், உக்ரைன், இங்கிலாந்து உள்ளிட்ட 45 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

Update: 2023-10-28 07:46 GMT

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் அப்பாவி மக்கள் தொடர்ந்து கொல்லப்படும் நிலையில், போரை நிறுத்துவதற்காக ஐ.நா. பொது சபையில் நேற்று முக்கிய தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஜோர்டான் தாக்கல் செய்த இந்த தீர்மானம், பிராந்தியத்தில் உடனடியான மற்றும் நீடித்த மனிதாபிமான போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது. காசாவில் தவிக்கும் பொதுமக்களுக்கு உயிர்காக்கும் பொருட்கள் மற்றும் சேவைகளை தடையின்றி வழங்குவதற்கான அவசர தேவையை இந்த தீர்மானம் வலியுறுத்தியது.

வாக்கெடுப்பில் தீர்மானத்துக்கு ஆதரவாக 120 நாடுகளும், எதிராக 14 நாடுகளும் வாக்களித்தன. இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, ஜப்பான், உக்ரைன், இங்கிலாந்து உள்ளிட்ட 45 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இதனால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக, இஸ்ரேல் பகுதியில் ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், தீர்மானத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என அமெரிக்காவின் ஆதரவுடன் கனடா வலியுறுத்தியது. இந்த திருத்த வரைவுக்கு ஆதரவாக இந்தியா மற்றும் 87 நாடுகள் வாக்களித்தன. 55 உறுப்பு நாடுகள் எதிராக வாக்களித்தன, 23 நாடுகள் வாக்களிக்கவில்லை. அதன்பின்னர் பேசிய ஐ.நா. சபையின் 78வது அமர்வின் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ், திருத்த வரைவை ஏற்க முடியாது என அறிவித்தார்.

ஹமாசின் பயங்கரவாத தாக்குதல் பற்றி எந்த குறிப்பும் இடம்பெறாததால் இந்தியா உள்ளிட்ட 45 நாடுகளும் வாக்கெடுப்பை புறக்கணித்தன.

இந்தியா விளக்கம்

இஸ்ரேலில் கடந்த 7ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள் அதிர்ச்சிகரமானவை என்றும், கண்டனத்துக்கு உரியவை என்றும் ஐ.நா. பொது சபையில் இந்திய பிரதிநிதி யோஜ்னா பட்டேல் பேசினார். பணயக் கைதிகளை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். பயங்கரவாதம் மிக கொடியது என்று கூறிய அவர், பயங்கரவாதத்துக்கு எல்லைகள், தேசியம் அல்லது இனம் எதுவும் தெரியாது என்றார்.

'பயங்கரவாத செயல்களை நியாயப்படுத்துவதை உலகம் ஏற்கக்கூடாது. வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபடவேண்டும். மனிதாபிமான நெருக்கடிகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும். சர்வதேச சமூகத்தின் முயற்சிகளையும், காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதையும் நாங்கள் வரவேற்கிறோம். இந்த முயற்சியில் இந்தியாவும் பங்களிப்பை வழங்கியிருக்கிறது.' எனவும் இந்திய பிரதிநிதி யோஜ்னா பட்டேல் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்