இந்தியாவின் சுதந்திர தின கொண்டாட்டத்தில் பிரபல அமெரிக்க பாடகி பங்கேற்பு
இந்தியாவின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் பிரபல அமெரிக்க பாடகி மேரி மில்பென் கலந்து கொள்கிறார்.;
வாஷிங்டன்,
சுதந்திர திருநாள் அமுதபெருவிழா
நமது நாட்டின் 75-வது சுதந்திர தினம், சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவாக வரும் 15-ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகள் தோறும் மூவர்ணக்கொடி பட்டொளி வீசிப் பறக்கவிடப்படுகிறது.
தலைநகர் டெல்லியில் நடக்க உள்ள சுதந்திர தின கொண்டாட்டத்தில் பிரபல அமெரிக்க பாடகி மேரி மில்பென் பங்கேற்று பாடுகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்திய கலாசார உறவுகள் கவுன்சில் அழைப்பின்பேரில் அமெரிக்காவின் பிரதிநிதியாக அவர் இங்கு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
3 ஜனாதிபதிகளுக்கு பாடியவர்
இந்த மேரி மில்பென் பாடகி, நடிகை, ஊடக ஆளுமை என பல முகங்களை கொண்டவர். ஜார்ஜ் டபுள்யூ புஷ், பராக் ஒபாமா, டொனால்டு டிரம்ப் என 3 அமெரிக்க ஜனாதிபதிகளுக்கு இசை நிகழ்ச்சி நடத்தி பாடி உள்ளார்.
இந்தியாவின் 'ஓம் ஜெய் ஜகதீஷ் ஹரே' மற்றும் 'ஜன கண மன' ஆகிய பாடல்களுக்கு பெயர் பெற்றவர், இந்த மேரி மில்பென்.
தனது இந்திய பயணத்தால் உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கிற இவர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
'புனித பயணமாக இந்தியா வருகிறேன்'
அதில் அவர் கூறி இருப்பதாவது:-
மனித உரிமை போராளியான டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, 1959-ம் ஆண்டு அவர் இந்தியாவிற்கு புனிதப் பயணம் மேற்கொண்டதன் மூலம், இந்தியாவின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் அமெரிக்காவின் கலாசார தூதராக பங்கேற்பதில் நான் பெருமை அடைகிறேன்.
இந்த பொக்கிஷம் போன்ற நாட்டை நான் கொண்டாடுவதில் பரவசம் அடைகிறேன். இந்தியாவுடனும், உலகமெங்கும் உள்ள இந்திய சமூகங்களுடனும், எனது அர்த்தமுள்ள உறவைக் கொண்டாகிறேன். இந்திய சுதந்திரத்தின் இந்த முக்கியமான கொண்டாட்டத்தின்போது, அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான ஜனநாயகக் கூட்டை முன்னிலைப்படுத்துகிறேன்.
நான் எனது இந்திய பயணத்துக்கு தயாராகிற இந்த வேளையில், எனது இதயத்தின் உணர்வுகள், "மற்ற நாடுகளுக்கு நான் சுற்றுலா பயணியாக செல்லலாம். ஆனால் இந்தியாவுக்கு நான் புனித பயணியாக வருகிறேன்" என்ற டாக்டர் மார்ட்டின் லூதர் கிங்கின் வார்த்தைகளை எதிரொலிக்கின்றன.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
சென்னை இசை கலைஞருடன்...
'இந்தியாஸ்போரா' அமைப்பின் நிறுவனர் எம்.ஆர். ரங்கசாமியின் அழைப்பின் பேரில் மேரி மில்பென் 'இந்தியாஸ்போரா குளோபல் போரத்தில்' முதன்முறையாக இந்தியாவில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார். அவர் இந்திய தேசிய கீதத்தை பாடுகிறார். 10-ந் தேதி மாலை சர்வ தேச இளம் பியானோ இசைமேதை லிதியன் நாதஸ்வரத்துடன் இணைந்து அவர் பாடுகிறார். இந்த லிதியன் நாதஸ்வரம், சென்னையைச் சேர்ந்த 16 வயதே ஆன இசைக்கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.