இலங்கையில் ஆம்புலன்ஸ் சேவைக்கு 3.3 டன் மருத்துவப் பொருட்கள் வழங்கியது இந்தியா..!
இலங்கையில் ஆம்புலன்ஸ் சேவைக்கு 3.3 டன் மருத்துவப் பொருட்களை இந்தியா வழங்கியுள்ளது.
கொழும்பு,
இலங்கையில் கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இலவச முன் மருத்துவமனை பராமரிப்பு ஆம்புலன்ஸ் சேவைக்கு 3.3 டன் மருத்துவப் பொருட்களை இந்தியா இன்று வழங்கியுள்ளது. இந்த இலவச முன் மருத்துவமனை பராமரிப்பு ஆம்புலன்ஸ் சேவை கொரோனா தொற்றுக்கு எதிரான இலங்கையின் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து இலங்கையில் உள்ள இந்தியாவின் உயர் ஆணையம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-
"உயிர்காக்கும் இச்சேவை சுமூகமாக இயங்குவதற்கு ஆதரவளிப்பதற்காக உயர் ஸ்தானிகர் 3.3 தொன்கள் மருந்துகளை இன்று கையளித்தார். கடந்த இரு மாதங்களில் இந்தியாவினால் வழங்கப்பட்ட 370 மில்லியன் இலங்கை ரூபாவுக்கும் அதிக பெறுமதியான மருத்துவ உதவியின் ஒரு பகுதியாக இத்தொகுதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவிடமிருந்து அன்பளிப்பாக வழங்கப்பட்ட அம்புலன்ஸ்களுடன் இச்சேவை ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் அச்சேவைக்கு ஆதரவு வழங்கிவருகின்றமை குறித்து மகிழ்வடைகின்றோம்." என்று பதிவிட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டில், இந்த சுவா செரியா ஆம்புலன்ஸ் சேவை இந்தியாவிடமிருந்து பெறப்பட்ட 7.6 மில்லியன் அமெரிக்க டாலர் மானியத்துடன் தொடங்கப்பட்டது. தற்போது இலங்கையின் அனைத்து மாகாணங்களிலும் இயங்கும் இந்த சேவைக்கு இந்தியா இலவச ஆம்புலன்ஸ்களையும் வழங்கியுள்ளது.
வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு சென்ற போது, கொரோனா தொற்று காலத்தில் உயிர்களைக் காப்பாற்றுவதில், சிறப்பான பங்காற்றிய இந்த ஆம்புலன்ஸ் சேவையின் பணி மற்றும் சாதனைகளைப் பாராட்டினார்.
இலங்கை மக்களின் பயன்பாட்டிற்காக 25 டன்களுக்கும் அதிகமான மருத்துவப் பொருட்கள் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றைக் கொண்ட மனிதாபிமானப் பொருட்களை இந்தியா கடந்த வாரம் இலங்கைக்கு வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்ய கொரோனா சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியிலிருந்து 1.8 பில்லியன் ரூபாயைப் பயன்படுத்துமாறு இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக பெறப்பட்ட இந்த நிதியை தற்போது கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளதால், சுகாதாரத் தேவைகளுக்காக பயன்படுத்த அதிபர் தெரிவித்துள்ளார்.