ஜி-7 நாடுகளின் எண்ணெய் விலை உச்சவரம்பு முடிவுக்கு இந்தியா ஆதரவில்லை; ரஷியா வரவேற்பு

ஜி-7 நாடுகளின் ரஷிய எண்ணெய் விலை உச்சவரம்பு முடிவுக்கு ஆதரவில்லை என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை ரஷியா வரவேற்றுள்ளது.;

Update:2022-12-11 11:41 IST


மாஸ்கோ,


உக்ரைனில் ராணுவ நடவடிக்கை பெயரில் ரஷியா போர் தொடங்கியது முதல் சர்வதேச அளவிலான எரிபொருள் விலை உயர்வு தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. ரஷியாவை வழிக்கு கொண்டு வர அமெரிக்கா உள்பட நாடுகள் பொருளாதார தடை விதித்தும் பலனில்லை.

இதனால், ரஷிய இறக்குமதி எண்ணெய்க்கு விலை உச்சவரம்பு நிர்ணயிப்பது என்று கடந்த செப்டம்பரில் ஜி-7 நாடுகள் முடிவு செய்தன. இதன்படி, இந்த முடிவை ஐரோப்பிய ஒன்றியமும் அப்படியே ஏற்கிறோம் என கூறியது.

இதனை தொடர்ந்து, ஜி-7 நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் ஒருமித்து, ரஷியாவிடம் இருந்து விலைக்கு வாங்கப்படும் எண்ணெய்க்கு பீப்பாய் ஒன்றுக்கு 60 அமெரிக்க டாலர் தரப்படும் என கடந்த 5-ந்தேதி விலை உச்சவரம்பு நிர்ணயித்து அதற்கான முடிவை வெளியிட்டது.

இந்த விலைக்கு கூடுதலாக எண்ணெய் விற்கப்பட்டால், ரஷிய எண்ணெய் ஏற்றுமதிக்கான காப்பீடு, நிதி மற்றும் பிற சேவைகள் தடை செய்யப்படும் என்றும் தெரிவித்தது.

இதனை தொடர்ந்து ரஷிய அதிபர் புதின் செய்தியாளர்களிடம் கூறும்போது, நாங்கள் முன்பே கூறியது போன்று, மேற்கத்திய நாடுகளின் முட்டாள்தனம் வாய்ந்த முன்மொழிவான, விலை உச்சவரம்பு நிர்ணயத்திற்கு ஆதரவளிப்பது என்ற முடிவை எடுக்கும் நாடுகளுக்கு எண்ணெய் விற்பனை கிடையாது என அதிரடியாக கூறினார்.

எனினும், இதுவே எங்களின் இறுதியான முடிவு என்று நான் கூற வரவில்லை. அதுபற்றி நாங்கள் யோசிப்போம். தேவைப்பட்டால், அதுபோன்ற நாடுகளுக்கான எண்ணெய் உற்பத்தியை நாங்கள் குறைப்போம் என நேற்று கூறினார்.

இதுபற்றி அடுத்த சில நாட்களில் விவரங்கள் தெரிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார். மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள எண்ணெய்க்கான விலை உச்சவரம்பு ஆனது தற்போது, ரஷியாவின் எண்ணெய் விற்பனை விலையுடன் ஒத்து போகின்ற அளவிலேயே உள்ளன.

அதனால், அவர்களின் அறிவிப்பால் ரஷியாவுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட போவதில்லை என்றும் அவர் கூறினார். இந்நிலையில், ரஷியாவுக்கான இந்திய தூதர் பவன் கபூர் மற்றும் ரஷிய துணை பிரதமர் அலெக்சாண்டர் நோவக்கின் சந்திப்பு நடந்தது. இதில், ரஷியா மற்றும் இந்தியா இடையேயான வர்த்தகம் குறிப்பிடத்தக்க வகையில் வளர்ச்சி அடைந்து உள்ளது என இரு நாடுகளும் குறிப்பிட்டன.

இதனையடுத்து, ரஷிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், ரஷிய எண்ணெய்க்கு ஜி-7 நாடுகள் மற்றும் அதன் கூட்டணி நாடுகள் விதித்த விலை உச்சவரம்புக்கு ஆதரவு இல்லை என்ற இந்தியாவின் முடிவை ரஷிய துணை பிரதமர் வரவேற்றுள்ளார் என தெரிவித்து உள்ளது.

நடப்பு ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் ரஷியாவிடம் இருந்து, இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி 163.5 லட்சம் டன்களாக உள்ளது. உக்ரைன் போர் சூழலிலும், தொடர்ந்து ரஷியாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது என அறிக்கை தெரிவிக்கின்றது.

இந்தியாவின் இறக்குமதி முடிவை நியாயப்படுத்தும் வகையில் மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் அதற்குரிய தகவலை வெளியிட்டார். கடந்த கோடை காலத்தில், இந்தியாவிற்கான எண்ணெய் இறக்குமதி நாடுகளின் வரிசையில் ரஷியா 2-வது இடம் வகித்தது. தவிர, எண்ணெய் பொருட்கள் மற்றும் நிலக்கரி இறக்குமதியும் அதிகரித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்