உலகில் மோதல்கள், பதற்றம் நிலவும் சூழலில் இந்தியா-ஆசியான் நட்பு முக்கியமானது - பிரதமர் மோடி
21-வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி லாவோஸ் நாட்டுக்கு சென்றுள்ளார்.;
வியன்டியன்,
21-வது ஆசியான்-இந்தியா மற்றும் 19-வது கிழக்காசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக 2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி லாவோஸ் நாட்டுக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் லாவோஸ் தலைநகர் வியன்டியனில் இன்று நடைபெற்ற ஆசியான்-இந்தியா அமைப்பின் 21-வது உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:-
10 ஆண்டுகளுக்கு முன்பே கிழக்கு ஆக்ட் பாலிசியை (Act East Policy) அறிவித்தேன். கடந்த பத்து ஆண்டுகளில் அது இந்தியாவுக்கும் ஆசியான் நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று உறவுகளுக்கு புதிய ஆற்றலையும், திசையையும், வேகத்தையும் கொடுத்திருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளில், இந்தியா-ஆசியான் வர்த்தகம் கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்ந்து 130 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது.
ஆசிய நூற்றாண்டு என்று அழைக்கப்படும் 21-நூற்றாண்டு இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளின் நூற்றாண்டு என்று நான் நம்புகிறேன். உலகின் பல பகுதிகள் மோதல்கள் மற்றும் பதற்றத்தை எதிர்கொள்ளும் நேரத்தில் இந்தியா-ஆசியான் நாடுகளுக்கு இடையிலான நட்பு மற்றும் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது. இவ்வாறு அவர் கூறினார்.