சாதாரண கைதிகளைப்போல இம்ரான்கான் சிறையில் வேலை செய்ய உத்தரவு
இம்ரான்கானுக்கு இதுவரை 4 வழக்குகளில் 34 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பல்வேறு ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு லாகூரில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிரான வழக்குகளில் அடுத்தடுத்து தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இம்ரான்கானுக்கு இதுவரை 4 வழக்குகளில் 34 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வெவ்வேறு வழக்குகளில் இம்ரான்கானுடன் அவரது மனைவி புஷ்ரா பீவியும், முன்னாள் வெளியுறவு மந்திரி மஹ்மூத் ஷா குரேஷியும் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இம்ரான்கானும், குரேஷியும் அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் புஷ்ரா பீவி, கிளைச்சிறையாக அறிவிக்கப்பட்ட இம்ரான்கானின் இல்லத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.
அடியாலா சிறையில் இம்ரான்கானுக்கும், குரேஷிக்கும் உயர்மட்ட கைதிகள் என்கிற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அதாவது சாதாரண கைதிகளை போல அல்லாமல் சிறையில் அவர்களுக்கு பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இருவரும் தங்களுக்கு தேவையான உணவை தாங்களே தயாரித்து சாப்பிட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் உயர்மட்ட கைதிகளாக உள்ள போதிலும் இம்ரான்கானும், குரேஷியும் சிறை வாளகத்தில் பணிகளை மேற்கொள்ள வேண்டியது கட்டாயம் என சிறை நிர்வாகம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. எனினும் இருவரும் எந்த மாதிரியான பணிகளை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளனர் என்கிற தகவல் வெளியாகவில்லை.