அமைதியாக வாழ விரும்பினால்... ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இஸ்ரேல் எச்சரிக்கை
பணய கைதிகளை பற்றிய விவரங்களை உடனடியாக வெளியிடும்படி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பிடம் இஸ்ரேல் பாதுகாப்பு படை கூறியுள்ளது.
டெல் அவிவ்,
இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த 7-ந்தேதி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. பின்னர் அந்நாட்டு எல்லைக்குள் அதிரடியாக புகுந்து ஆண்கள் மற்றும் பெண்கள் என சிக்கியவர்களை கடுமையாக அடித்து, தாக்கி வன்முறையில் ஈடுபட்டது. இதில், 260 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.
210 பேரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றது. இதனை தொடர்ந்து, இஸ்ரேல் அரசும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. 19-வது நாளாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையேயான மோதல் இன்றும் தொடர்ந்து வருகிறது. பணய கைதிகளை மீட்கும் முயற்சியும் நடந்து வருகிறது.
இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு படை வெளியிட்டு உள்ள எச்சரிக்கை செய்தியில், அமைதியான வாழ்க்கை மற்றும் உங்களுடைய குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலம் என்பது உங்களுடைய விருப்பம் என்றால், உடனடியாக மனிதநேய நலன்களுக்கான விசயங்களை செய்யுங்கள். உங்கள் பகுதிகளில் சிறை பிடித்து வைக்கப்பட்டு உள்ள பணய கைதிகளை பற்றிய ஆராயப்பட்ட மற்றும் மதிப்புமிக்க தகவலை பகிருங்கள் என தெரிவித்து உள்ளது.
உங்களுக்கும், உங்களுடைய வீடுகளுக்கும் அதிக பாதுகாப்பை வழங்குவதற்கான முயற்சியை நாங்கள் மேற்கொள்வோம் என்று இஸ்ரேல் ராணுவம் உறுதி கூறுகிறது. நிதி சார்ந்த பரிசையும் நீங்கள் பெறுவீர்கள். முழுமையான நம்பக தன்மைக்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம் என்றும் தெரிவித்து உள்ளது.
அப்படி யாரேனும் தகவல் வைத்திருக்கிறார்கள் என்றால் அவர்கள் தொடர்பு கொள்வதற்கான விவரங்களையும் ராணுவம் பகிர்ந்துள்ளது.
இதற்கு முன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேசும்போது, களத்தில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிராக, எங்களுக்கு ஒரேயொரு பணி உள்ளது. அது அவர்களை அழிப்பது. அந்த பணியை முடிக்கும் வரை நாங்கள் நிறுத்தமாட்டோம் என்று குறிப்பிட்டார்.