சூரிநாமில் மக்களின் பன்முக தன்மை என் மனம் கவர்ந்தது: ஜனாதிபதி திரவுபதி முர்மு பேச்சு
சூரிநாமில் இந்திய மக்கள் கப்பலில் சென்றடைந்த 150-வது ஆண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கலந்து கொண்டார்.;
பராமரிபோ,
இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு சூரிநாம் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். கடந்த ஞாயிற்று கிழமை அந்நாட்டின் பராமரிபோ நகரில் உள்ள ஜோஹன் அடால்ப் பென்ஜல் சர்வதேச விமான நிலையத்தில் சென்றிறங்கினார்.
அவரை, அந்நாட்டு தலைவர் மற்றும் இந்திய தூதர் உள்ளிட்டோர் முறைப்படி வரவேற்றனர். ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவியேற்ற பின்னர், அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.
சூரிநாம் நாட்டுக்கு, இந்தியர்கள் வந்தடைந்த 150 ஆண்டுகள் நிறைவையொட்டி கலாசார திருவிழா ஒன்று இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் சூரிநாமின் அதிபரான சந்திரிகாபிரசாத் சந்தோகி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து ஜனாதிபதி முர்மு பேசினார்.
அப்போது இந்தியாவுக்கும், சூரிநாமுக்கும் இடையே பல ஒற்றுமைகள் உள்ளன என அவர் குறிப்பிட்டார். அவர் பேசும்போது, உங்களுடைய நாட்டின் பசுமையான நிலப்பரப்பின் அழகு, குறிப்பிடத்தக்க வகையில் வெவ்வேறு தாவரங்கள் மற்றும் வனவிலங்கு மற்றும் தூய்மையான தென்றல் காற்று என ஆச்சரியம் நிறைந்த சூழலை உருவாக்குகிறது.
எனினும், சூரிநாமில் மக்களின் பன்முக தன்மையே எனது நெஞ்சம் கொள்ளை கொண்ட ஒன்றாக அமைந்து உள்ளது. உங்களது சிறப்பான வரவேற்பு, உங்களுடைய அன்பு, ஆர்வம் ஆகியவையும் கூட. நான் எனது சொந்த நாட்டில் இருப்பது போன்று உணர்கிறேன் என ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசியுள்ளார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, முதன்முறையாக சூரிநாமுக்கு, இந்தியாவில் இருந்து மக்களின் முதல் குழு ஒன்று கப்பலில் புறப்பட்டு கடந்த 1873-ம் ஆண்டு சென்றடைந்தனர். சூரிநாமுக்கு இந்தியர்கள் வந்தடைந்த 150-வது ஆண்டுதினம் கொண்டாடப்படுகிறது.
இதற்காக நாம் அனைவரும் இன்று ஒன்றாக கூடியிருக்கிறோம். சூரிநாமின் வரலாற்றில் இது ஒரு முக்கிய மைல்கல் ஆகும் என ஜனாதிபதி திரவுபதி முர்மு குறிப்பிட்டார்.