ஐயான் சூறாவளி தாக்குதல்; கியூபாவில் அகதிகள் படகு கவிழ்ந்தது: 20 பேர் மாயம்

கியூபாவின் அகதிகள் சென்ற படகு ஐயான் சூறாவளியில் சிக்கியதில் 20 பேரை காணவில்லை. 3 பேர் மீட்கப்பட்டனர்.

Update: 2022-09-29 05:03 GMT



புளோரிடா,


கியூபாவில் இருந்து அகதிகளை ஏற்றி கொண்டு சென்ற படகு ஒன்று ஐயான் சூறாவளியில் சிக்கியதில் கவிழ்ந்தது. இதில், 23 அகதிகள் நீருக்குள் மூழ்கியுள்ளனர். இதுபற்றி அறிந்த, அமெரிக்க கடலோர காவல் படையை சேர்ந்த ரோந்து பணியில் ஈடுபட்ட வீரர்கள் உடனடியாக புளோரிடாவின் ஸ்டாக் தீவு பகுதிக்கு சென்றுள்ளனர். வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு, அகதிகளில் 3 பேரை மீட்டனர்.

அகதிகளுக்கு உடலில் நீர்ச்சத்து குறைந்து போயுள்ளது. மூச்சிறைப்பும் ஏற்பட்டு உள்ளது. இதன்பின்னர் அவர்கள் உடனடியாக அருகேயுள்ள உள்ளூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

4 அகதிகள் நீந்தி கரை சேர்ந்து உள்ளனர். அவர்களும் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். புயலால் மூழ்கிய படகில் மீதமிருந்த 20 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமடைந்து உள்ளது.

கியூபாவை தாக்கிய ஐயான் சூறாவளியால் அந்நாட்டில் பலத்த காற்று வீசியது. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இதனால், 1.1 கோடி பேர் பாதிக்கப்பட்டனர். தீவின் மேற்கு பகுதியிலும் பாதிப்பு ஏற்படுத்தியது. கியூபாவின் பினார் டெல் ரியோ மேற்கு மாகாணத்தில் புயலுக்கு 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் கியூபாவில், நீண்டகால உணவு பற்றாக்குறை, மருந்து மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு ஆகியவற்றுக்கு இடையே ஐயான் சூறாவளி பாதிப்பும் சேர்ந்து கொண்டது. இதனால், இயல்பு நிலைக்கு மீண்டு வருவதற்கான முயற்சிகளை சிக்கலாக்கி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்