நிதி இல்லாததால் அமெரிக்க அரசு முடங்கும் அபாயம்

பொதுப்பணிக்காக செலவிடுவதற்கான நிதி இல்லாததால் அமெரிக்க அரசு முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Update: 2023-09-30 16:57 GMT

நிதியளிப்பு மசோதா

உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவில் பொதுப்பணிகளுக்கு செலவிடுவதற்காக ஆண்டுதோறும் நிதி ஒதுக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிதியளிப்பு மசோதா நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி கையெழுத்திட்ட பிறகே பொதுப்பணிகளுக்கு நிதி ஒதுக்கப்படும்.

அரசு முடங்கும் அபாயம்

இந்த சூழலில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் குடியரசு கட்சியினர், உக்ரைன் போருக்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட மிகப்பெரிய செலவினங்களைக் குறைத்தாலொழிய நிதியளிப்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கமாட்டோம் என கூறி மசோதாவை நிறைவேற்ற விடாமல் முடக்கியுள்ளனர்.

இதனிடையே அமெரிக்க அரசு பொதுப்பணிகளுக்காக ஒதுக்கிய நிதி இன்றுடன் காலியான நிலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் அமெரிக்க அரசு முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

லட்சக்கணக்கான ஊழியர்கள் பாதிக்கப்படுவர்

ஒருவேளை அமெரிக்க அரசு முடங்கினால் அமெரிக்க அரசின் அனைத்து நிறுவனங்களையும் அது பாதிக்கும். அரசு அலுவலகங்கள் ஒட்டுமொத்தமாக முடங்கும். நலத்திட்டங்களுக்கான நிதி, கோர்ட்டுகள், அருங்காட்சியகங்கள், தேசிய பூங்காக்களுக்கான செலவினங்கள் ஒட்டுமொத்தமாக நிறுத்தப்படும். 20 லட்சம் அரசு பணியாளர்கள் மற்றும் 20 லட்சம் ராணுவ துருப்புக்களுக்கான ஊதியம் நிறுத்தப்படும். இதனால் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் ஊதியம் இன்றி பணியாற்றும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். லட்சக்கணக்கான ஊழியர்கள் பணியிழக்கும் சூழலும் ஏற்படும்.

உலக அளவில் பாதிப்பு

ஒருவேளை அமெரிக்க அரசு முடங்கினால் அது உலக அளவில் பொருளாதார சந்தைகளை பாதித்து, அதன் மூலம் பல்வேறு நாடுகளின் உள்நாட்டுச் சந்தைகளில் எதிரொலிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

அமெரிக்க அரசு முடங்கியுள்ளது இது முதல் முறையல்ல. 1995-ஆம் ஆண்டு 20 நாட்களுக்கு மேலாக அரசு முடங்கியது. இதேபோல் 2013-ம் ஆண்டு 15 நாட்களுக்கு மேலாக முடங்கியிருந்தது.

கடைசியாக கடந்த 2018 மற்றும் 2019-க்கு இடையில் அதிகபட்சமாக 35 நாட்கள் அமெரிக்க அரசு முடங்கியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்