விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர்: ஈரான் அதிபரின் கதி என்ன? - மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணிகள் தாமதம்

ஈரானில் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. அவரின் கதி என்ன என்பது குறித்து இதுவரை தெரியவில்லை.

Update: 2024-05-19 20:24 GMT

Image Courtacy: AFP

டெஹ்ரான்,

ஈரான் நாட்டின் அதிபராக இருப்பவர் இப்ராஹிம் ரைசி. இவர் அண்டை நாடான அஜர்பைஜானில் புதிதாக கட்டப்பட்டுள்ள அணையை திறந்து வைப்பதற்காக நேற்று அங்கு சென்றார். அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் உடன் அணை திறப்பு விழாவில் கலந்து கொண்ட இப்ராஹிம் ரைசி, அதன் பின்னர் ஹெலிகாப்டரில் ஈரானுக்கு புறப்பட்டார்.

அவருடன் ஈரான் வெளியுறவு மந்திரி உசைன் அமிரப்டோலாஹியன் மற்றும் மூத்த அதிகாரிகள் சிலர் ஹெலிகாப்டரில் பயணித்தனர். அப்போது ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் அஜர்பைஜான் நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள ஜோல்பா நகருக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இதனை ஈரான் அரசு ஊடகம் உறுதி செய்தது.

எனினும் ஹெலிகாப்டர் எப்படி விபத்துக்குள்ளானது? அதிபர் இப்ராஹிம் ரைசி உள்பட ஹெலிகாப்டரில் பயணித்தவர்களின் கதி என்ன? என்பன போன்ற தகவல்களை அரசு ஊடகம் இதுவரை தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக மீட்பு குழுக்களால் விபத்து நடந்த பகுதிக்கு செல்ல முடியவில்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் (IRGC) தளபதி ஹொசைன் சலாமி, விபத்து நடந்த பகுதிக்கு சென்று தேடுதல் மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு உதவி செய்து வருகிறார். 

மேலும் அங்குள்ள செய்தி நிறுவனங்களின் தகவல் படி, ஐ.ஆர்.ஜி.சி.யின் உயர்மட்டத் தளபதிகள், அமைச்சர்கள், முதல் துணைத் தலைவர் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் நெருக்கடி நிலைமை மேலாண்மைக் கூட்டம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்