2,100-ம் ஆண்டில் உலக நாடுகளை வெப்பம் 3 மடங்கு அதிகரித்து தாக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

பருவகால மாற்ற விளைவால் 2,100-ம் ஆண்டில் வெப்பம் 3 மடங்கு அதிகரித்து உலக நாடுகளை தாக்க கூடிய ஆபத்து உள்ளது என ஆய்வு ஒன்று எச்சரிக்கை தெரிவிக்கின்றது.

Update: 2022-08-28 07:46 GMT



வாஷிங்டன்,



சமீபத்தில் ஸ்பெயின், போர்ச்சுகல் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் மற்றும் இங்கிலாந்து, சீனா ஆகிய நாடுகளில் வெப்ப நிலை அதிகரித்து பொதுமக்களை அவதிப்பட செய்தது. இதன் ஒரு பகுதியாக வெப்ப அலையும் பரவி உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் ஆகிய இரு நாடுகளில் மட்டுமே மொத்தம் ஆயிரக்கணக்கானோர் வெப்ப அலைக்கு இரையாகினர்.

இந்த நிலையில், ஒரு புதிய ஆய்வு தகவலின்படி, பருவகால மாற்ற விளைவால் வருங்காலத்தில் வெப்பம் 3 மடங்கு அதிகரித்து உலக நாடுகளை தாக்க கூடிய ஆபத்து உள்ளது என தெரிய வந்துள்ளது.

இதன்படி, 2,100-ம் ஆண்டில் அமெரிக்காவின் தென்கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் கோடை காலங்களில் பெருமளவு வெப்ப குறியீடு கடுமையாக இருக்கும். பூமியின் வளம் நிறைந்த அட்ச ரேகை பகுதிகளில், வெப்பம் மற்றும் ஈரப்பதம் அதிகரித்து கொண்டே வருகிறது.

இதனால் 103 டிகிரி அல்லது அதற்கும் கூடுதலான வெப்ப அளவு பதிவாகிறது. கோடையில் தற்போது இதுபோன்று சில சமயங்களில் ஏற்படும் இந்த நிகழ்வானது, இந்நூற்றாண்டின் மத்தியில், ஆண்டுக்கு 20 முதல் 50 மடங்கு என்ற எண்ணிக்கையில் அதிகரிக்க கூடும் என ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது.

அந்த ஆய்வின் தலைவரான ஹார்வர்டு பல்கலை கழகத்தின் பருவகால விஞ்ஞானியான லூக்காஸ் ஜெப்படெல்லோ கூறும்போது, மிக தீவிர ஆபத்து விளைவிக்க கூடிய வெப்ப குறியீடு ஆனது 124 டிகிரி (51 டிகிரி செல்சியஸ்) என்ற அளவில் வருங்காலத்தில் பதிவாக கூடும். தற்போது இதுபோன்று ஏற்படுவது மிக அரிது.




 

எனினும், வருங்காலத்தில் இந்தியா உள்ளிட்ட வெப்ப மண்டல பகுதிகளில் ஆண்டுக்கு ஒன்று முதல் 4 வாரங்கள் வரை இந்நூற்றாண்டின் இறுதியில் இந்த நிலையை சந்திக்க கூடும் என எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

இதனால், கோடிக்கணக்கான மக்கள் தீவிர வெப்ப விளைவில் சிக்கி தவிக்க இருக்கின்றனர். தற்போது, நாம் பார்க்க கூடிய வகையில் நிகழாத ஒன்று, வருங்காலத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஏற்பட போகிறது என அவர் தெரிவித்து உள்ளார்.

இதற்காக ஜெப்படெல்லோ மற்றும் அவரது சக ஆராய்ச்சியாளர்கள் 1,000க்கும் கூடுதலான கணினி தூண்டுதல்களை கொண்டு ஆய்வில் ஈடுபட்டு உள்ளனர். கடந்த 1979-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரையில் உலகம் முழுவதும் ஏற்பட்ட வெப்ப நிகழ்வை அடிப்படையாக கொண்டு 2050 மற்றும் 2100 ஆகிய ஆண்டுகளுக்கு ஒப்பிட்டு கணக்கிட்டு பார்த்துள்ளனர்.

இதில், சிகாகோ நகரில் 1979-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் 4 முறை மட்டுமே 103 டிகிரி வெப்ப குறியீடு பதிவாகி இருந்தது. ஆனால், நூற்றாண்டு இறுதியில் ஆண்டுக்கு 11 முறை இந்த தீவிர வெப்ப பதிவு ஏற்பட கூடும் என ஆய்வு தெரிவிக்கின்றது.

பருவகால மாற்றத்தின் 4 விளைவுகளில் வெப்ப அலைகள் முக்கிய ஒன்று. கடல் நீர்மட்டம் உயருதல், தண்ணீர் பற்றாக்குறை மற்றும் ஒட்டுமொத்த உயிரின சூழலில் மாற்றங்கள் ஏற்படுவது ஆகியன பிற பருவகால மாற்ற விளைவுகளாக உள்ளன என கூறப்படுகிறது.




 

2021-ம் ஆண்டு, வெப்ப அலையால் பதிவான அதிகபட்ச வெப்பம் மற்றும் ஆயிரக்கணக்கானோரை பலி வாங்கிய வெப்ப அலை பற்றிய ஆய்வில் ஈடுபட்டவர் ஜெப்படெல்லோ.

இதுபற்றி பருவகால விஞ்ஞானியான ஜெனிபர் பிரான்சிஸ் கூறும்போது, இந்த ஆய்வில் கூறப்பட்டு உள்ள பயங்கர கணிப்புகள் நம்பத்தகுந்தவை என்பது வருத்தத்திற்குரியது என கூறியுள்ளார்.

ஆய்வில் அவர் பங்கேற்காதபோதும், ஐரோப்பிய நாடுகள், சீனா, வட அமெரிக்காவின் வடமேற்கு பகுதிகள், இந்தியா, தெற்கு-மத்திய அமெரிக்கா, இங்கிலாந்து, மத்திய சைபீரியா ஆகிய நாடுகளில் கடந்த 2 கோடை காலங்களில் தீவிர வெப்ப அலைகளின் தாக்கங்கள் காணப்பட்டு உள்ளன என்பதே இதற்கு சான்றாக உள்ளதுடன் வருங்கால நிகழ்வையும் வெளிக்காட்டும் ஜன்னலாக உள்ளது என கூறியுள்ளார்.

இதனால், வருங்கால தலைமுறையினர் அதிக பாதிப்புகளை சந்திக்க கூடிய ஆபத்தில் உள்ளனர். பருவகால மாற்றங்கள் பற்றி வளர்ச்சி அடைந்த நாடுகள் உள்பட பல நாடுகளும் அதிகம் பேசி வரும் சூழலில், அதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய கூட முன்வராத சூழலும் காணப்படுகிறது. இதனை இந்தியா உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகளும் பல்வேறு பருவகாலம் பற்றிய மாநாடுகளில் சுட்டி காட்டியுள்ளன.

எனினும், பொதுமக்களாகிய நாம் வெப்ப விளைவுகளை கட்டுப்படுத்த கூடிய விசயங்களில் கவனம் செலுத்த வேண்டியதும் அவசியம் வாய்ந்த ஒன்றாக உள்ளது என்பது ஆய்வில் இருந்து தெரிய வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்