வடகொரியாவின் அடுத்த தலைவராகும் வாய்ப்பு இவருக்கே...!! தென்கொரியா கணிப்பு

கிம் இன்னும் இளமையாகவே இருக்கிறார். பெரிய அளவில் சுகாதார பாதிப்புகள் எதுவும் இல்லை. அவருக்கு வருகிற திங்கட்கிழமையுடன் 40 வயது ஆகிறது.

Update: 2024-01-04 17:00 GMT

சியோல்,

வடகொரியாவின் தலைவராக கிம் ஜாங் அன் இருந்து வருகிறார். ரகசிய நாடுகளில் ஒன்றாக அறியப்படும் அந்நாட்டில் அடுத்த தலைவராக யார் வருவார் என்பது பற்றி அந்நாட்டு அரசு ஊடகங்கள் எந்த தகவலையும் வெளியிடவில்லை.

இந்நிலையில், அன்னின் மகளான கிம் ஜூ யே தந்தையுடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அவருடைய தந்தையின் அதிக அன்புக்குரிய அல்லது மதிப்புக்குரிய குழந்தையாக ஜூ யே இருக்கிறார் என அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கேற்ப தென்கொரியாவும் ஜூ யே, அடுத்த வாரிசாக வரக்கூடும் என தெரிவித்து உள்ளது. கிம் ஜாங் அன்னின் மகளின் அதிகரித்து வரும் அரசியல் நிலைப்பாடு மற்றும் தந்தையுடனான நெருக்கம் ஆகியவற்றை வடகொரியாவில் இருந்து வெளிவரும் செய்திகளும் மற்றும் புகைப்படங்களும் நிரூபிக்கின்றன.

கடந்த செப்டம்பரில் ராணுவ அணிவகுப்பு ஒன்றின்போது, வி.ஐ.பி. பார்வையாளர் வரிசையில் இருந்தபடி அதனை ஜூ யே பார்வையிட்டு கைதட்டினார்.

கடந்த நவம்பரில், விமான படை தலைமையகத்திற்கு தன்னுடைய தந்தையுடன் வருகை தந்த ஜூ யே, கிம் ஜாங் அன்னின் முன்னால் நின்று புகைப்படம் எடுத்து கொண்டார்.

அப்போது, இருவரும் கருப்பு கண்ணாடி அணிந்தபடி காணப்பட்டனர். கடந்த ஞாயிற்று கிழமை பியாங்யாங் நகரில், புது வருட கொண்டாட்டம் நடந்தபோது, கிம் ஜாங் அன் அவருடைய மகளின் கன்னத்தில் முத்தமிட்டார். பதிலுக்கு மகளும் கிம்மின் கன்னத்தில் முத்தமிட்டார்.

இந்நிலையில், தென்கொரியாவின் தேசிய நுண்ணறிவு சேவை என்ற உளவு அமைப்பு இன்று கூறும்போது, கிம் ஜாங் அன்னின் அடுத்த வாரிசாக கிம் ஜூ யே வருவது போன்று தெரிகிறது என தெரிவித்து உள்ளது.

கிம் இன்னும் இளமையாகவே இருக்கிறார். பெரிய அளவில் சுகாதார பாதிப்புகள் எதுவும் இல்லை. அவருக்கு வருகிற திங்கட்கிழமையுடன் 40 வயது ஆகிறது.

அதனால், அடுத்த வாரிசுக்கான நடைமுறையை பற்றிய அனைத்து சாத்தியங்களை பற்றியும் ஆலோசித்து வருகிறோம் என்றும் தெரிவித்து உள்ளது.

அரசியல் படிப்புகளுக்கான சியோல் நகர ஏசன் மையத்தின் நிபுணரான டூ ஹியோகன் சா கூறும்போது, ஜூ யேவுக்கு அரசியல் சாதனைகள் என்பது குறைவாக உள்ளது. அதனுடன், நாட்டின் வருங்கால தலைவராக அவர் முறைப்படி அறிவிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

கிம் ஜாங்குக்கு அடுத்து அவருடைய வாரிசாக வருவதற்கான தகுதியை ஜூ யே பெற்றிருக்கிறார் என்று கிம் நம்புகிறார் என்று தென்கொரியாவின் செஜாங் மையத்தின் நிபுணரான சியாங் சியாங்-சாங் என்பவர் கூறுகிறார்.

கிம் ஜாங்கின் உடல் பருமன் தீவிரம் வாய்ந்ததுபோல் காணப்படுகிறது. அதனால், அவர் நாளைக்கே மயக்கமடைந்து விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் கூறியுள்ளார்.

ஜு யே அவருடைய தந்தையுடன் பெரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது என்பது, வளர்ந்து வரும் வயதிலேயே மனிதர்களுடனான தொடர்பை கட்டமைப்பது மற்றும் அரசாட்சி முறையை பற்றி கற்று கொள்வது போல் தெரிகிறது என்றும் சியாங் கூறுகிறார்.

இதற்கு முன் கிம் ஜாங் அன்னோ அல்லது கிம் ஜாங் 2-வோ, அவர்கள் இருவரும் பெரியவர்களாகும் வரை அரசு ஊடகத்தில் அவர்களின் பெயர் குறிப்பிடப்படவேயில்லை. ஆனால், ஜூ யேவின் பெயர் வெளிவந்திருப்பது வெளிநாட்டு நிபுணர்களுக்கு பெரிய ஆச்சரியம் ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்