காசா மக்களின் எரிபொருள், நீர், மின்சாரம்... ஹமாஸ் அமைப்பின் கையில்; இஸ்ரேல் பகிரங்க குற்றச்சாட்டு

ஷிபா மருத்துவமனையின் உள்ளே கட்டளை மையம் அமைத்து, எங்கள் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு ராக்கெட் தாக்குதல்களை நடத்துகிறது என இஸ்ரேல் குற்றச்சாட்டு கூறியுள்ளது.

Update: 2023-10-28 13:13 GMT

டெல் அவிவ்,

இஸ்ரேல் பாதுகாப்பு படை வெளியிட்ட செய்தியில், ஷிபா மருத்துவமனைக்கு கீழே ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் தலைமையகங்களை அமைத்து செயல்பட்டு வருகின்றனர்.

காசா மக்களின் அடிப்படை தேவைகளான எரிபொருள், ஆக்சிஜன், நீர் மற்றும் மின்சாரம் உள்ளிட்டவற்றை பயங்கரவாத செயல்களுக்காக அந்த பயங்கரவாத குழு பயன்படுத்தி வருகிறது என்றும் கூறியுள்ளது.

ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு இந்த ஷிபா மருத்துவமனையின் உள்ளே கட்டளை மையம் ஒன்றை அமைத்து, இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஆயுதங்களை பதுக்கி வைத்தும் வருகிறது என குற்றச்சாட்டாக கூறியுள்ளது.

இதுபற்றி இஸ்ரேல் பாதுகாப்பு படையின் அதிகாரி ஒருவர் மற்றும் காசாவின் எரிசக்தி துறை அதிகாரி இடையேயான உரையாடல் வெளியிடப்பட்டு உள்ளது. அதில், இணைப்பு உள்ள பொதுமக்கள் கியாஸ் நிலையங்களுக்கு செல்லுங்கள் என அதிகாரி கூறுகிறார்.

ஆனால், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் ஒரு எரிபொருள் லாரியை கொண்டு வருகிறார்கள். இணைப்புகளை பயன்படுத்தி அதனை நிரப்பி கொள்கிறார்கள் என்று அவர் கூறுகிறார்.

ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் மருத்துவமனைகளை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் 10 லட்சம் லிட்டர் டீசலாவது இருக்கும். இதுபோக பூமிக்கடியில், குறைந்தது 5 லட்சம் லிட்டர் டீசலாவது இருக்கும் என கூறுகிறார்.

தொடர்ந்து அந்த அதிகாரி கூறும்போது, தினசரி 10 ஆயிரம் பேரை இஸ்ரேல் படை கொன்றாலும், அனைத்து மக்களும் பலியானாலும், அது அவர்களுக்கு ஒரு விசயமே இல்லை. அவர்களுக்கு அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதே முக்கியம் என கூறுகிறார்.

எனினும், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு இவை அடிப்படையற்றவை என கூறியுள்ளது. எங்களுடைய மக்களுக்கு எதிராக ஒரு புதிய இனப்படுகொலையை நிகழ்த்துவதற்கு முன்பு இதுபோன்ற பொய்களை அவர்கள் வெளியிடுகின்றனர்.

அல்-ஆலி மருத்துவமனை மீது நடந்த தாக்குதலை விட பெரிய தாக்குதல் ஒன்றை நடத்த முடிவு செய்துள்ளனர் என அந்த அமைப்பின் உறுப்பினரான இஜத் அல்-ரிஷ்க் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்