அபுதாபியில் பிரமாண்ட இந்து கோவில்: இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

கோவில் கட்டிடம் மொத்தம் 55 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.700 கோடி மதிப்பில் கோவில் உருவாகி உள்ளது.;

Update:2024-02-14 07:15 IST

அபுதாபி,

கடந்த 2015-ம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக அமீரகத்திற்கு முதல் முறையாக வருகை புரிந்தார். அப்போது அமீரகத்தில் வசிக்கும் இந்திய இந்து மக்களுக்காக மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க அபுதாபியில் இந்து கோவில் ஒன்று கட்டுவதற்கு அமீரக அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டது.

மேலும் அந்த கோவிலை கட்டுவதற்கு துபாய்-அபுதாபி, ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் ரக்பா பகுதியில் 27 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. அபுதாபி அரசு சார்பில் கோவில் கட்ட நிலத்தை அன்பளிப்பாக தருவதற்கான உத்தரவை அன்றைய அபுதாபி பட்டத்து இளவரசராக பொறுப்பில் இருந்த தற்போதைய அமீரக அதிபர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் பிறப்பித்தார்.

இந்த கோயிலின் கட்டுமான பணிகளுக்கு மற்றும் நிர்வகிக்க குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத் நகரை சேர்ந்த பிஏபிஎஸ் (போச்சசன்வாசி ஸ்ரீ அக்ஷார் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா) என்ற ஆன்மிக அமைப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டது. தொடர்ந்து அபுதாபியின் ரக்பா பகுதி அருகே அல் முரைக்கா பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக கோவில் கட்டமான பணிகள் மும்முரமாக நடந்து வந்தது. இந்த கோவில் கட்டுமான பணிகள் கடந்த மாதம் நிறைவடைந்தன.

கோவில் இரும்பு மற்றும் கம்பிகள் எதுவும் இல்லாமல் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட இளஞ்சிவப்பு மற்றும் பளிங்கு கற்களை கொண்டு பாரம்பரிய இந்து கோவிலாக கட்டப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சமாகும். மேலும் கட்டிட உறுதிக்காக சிறப்பு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 7 அமீரக பகுதிகளை குறிக்கும் வகையில் 7 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் ஆயுட்காலம் 1,000 ஆண்டுகளாகும்.

அபுதாபி இந்து கோவில் வளாகம் 27 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கோவில் கட்டிடம் மட்டும் மொத்தம் 55 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.700 கோடி மதிப்பில் உருவானது. இதில் மிகப்பெரிய கலையரங்கம், கண்காட்சி அரங்கம், நூலகம், உணவகங்கள், கூட்டங்கள் நடத்தும் பகுதி மற்றும் 5 ஆயிரம் பேர் நிகழ்ச்சிகளை ஒரே நேரத்தில் பார்வையிடும் வசதியுடன் 2 சமூக அரங்குகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக வளாகத்தின் அருகே 53 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கார் நிறுத்தப்பகுதி அமைக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 1,200 கார்கள் மற்றும் 30 பஸ்கள் ஒரே நேரத்தில் நிறுத்திக்கொள்ளலாம். கூடுதலாக ஹெலிகாப்டர் இறங்குவதற்கு வசதியாக 2 தளங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கோவிலின் கும்பாபிஷேகம் மற்றும் சிலைகளுக்கு பிரதிஷ்டை செய்யும் விழா இன்று (புதன்கிழமை) காலையில் நடக்கிறது. பிஏபிஎஸ் அமைப்பின் தலைமை குரு மஹாந்த் சுவாமி மஹராஜ் தலைமையில் அனைத்து விதமான பூஜைகளும் நடக்கிறது. இந்த நிகழ்ச்சிகளில் அபுதாபி பிஏபிஎஸ் இந்து கோவிலின் தலைமை குரு பூஜ்ஜிய பிரம்மவிஹாரி சுவாமி மற்றும் பிற குருக்கள் பங்கேற்கின்றனர்.

தொடர்ந்து மாலை கோவில் திறப்பு விழா நடைபெறுகிறது. இதில் இந்திய பிரதமர் மோடி கலந்து கொண்டு கோவிலை திறந்து வைக்கிறார். பின்னர் அவர் அங்கு நடக்கும் பூஜைகளில் கலந்து கொள்கிறார். பின்னர் பிரதமர் மோடி அமீரக பயணத்தை நிறைவு செய்து இந்தியா திரும்புகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்