ஜெர்மனி: தன்னை போலவே உருவம் கொண்ட பெண்ணை தேடிப்பிடித்து கொலை செய்த மாடல் அழகி: காரணம் என்ன? பரபரப்பு தகவல்கள்

ஜெர்மனியை சேர்ந்த மாடல் அழகி ஒருவர் தன்னை போலவே உருவம் கொண்ட பெண்ணை தேடிப்பிடித்து கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2023-02-01 22:06 GMT

கொலை செய்த மாடல் அழகி ஷஹ்ரபான்                               கொலை செய்யப்பட்ட கதீட்ஜா

பெர்லின்,

ஜெர்மனியை சேர்ந்த 23 வயதான மாடல் அழகி ஷஹ்ரபான் கே. ஈராக் வம்சாவளியான இவர் இன்ஸ்டாகிராமில் அழகு குறிப்புகளை வழங்கி பிரபலமாக விளங்கி வந்தார். திருமாணமாகி விவாகரத்து பெற்ற இவர் ஷேகிர் கே (வயது24) என்ற இளைஞரை காதலித்து வந்தார்.

இந்த சூழலில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஷஹ்ரபான் தனது பெற்றோரிடம் தான் தனது முன்னாள் கணவரை சந்திக்கப்போவதாக கூறி விட்டு வீட்டில் இருந்து சென்றார். ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மாயமான ஷஹ்ரபானை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அப்போது இங்கோல்ஸ்டாட் என்ற நகரில் ஷஹ்ரபானின் காரை போலீசார் கண்டுபிடித்தனர்.

காரில் கிடந்த பிணம்

அந்த காருக்குள் இளம்பெண் ஒருவர் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்தார். காருக்குள் கிடந்த பிணம் அச்சு அசலாக ஷஹ்ரபான் போலவே இருந்ததால் அது அவர்தான் என அவரது பெற்றோரும், போலீசாரும் நம்பினர்.

இதையடுத்து, போலீசார் அந்த உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு ஷஹ்ரபானின் கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்க தொடங்கினர்.

இதற்கிடையில் பிரேதபரிசோதனையில் காருக்குள் பிணமாக கிடந்தது ஷஹ்ரபான் அல்ல என்பது தெரியவந்தது. மேலும் கொலை செய்யப்பட்ட அந்த பெண் ஜெர்மனியை சேர்ந்ந மற்றொரு மாடல் அழகியான கதீட்ஜா ஓ (23) என்பதும் தெரியவந்தது.

துப்பு துலங்கியது

அதை அறிந்த போலீசார் கடும் அதிர்ச்சியடைந்தனர். கதீட்ஜா எப்படி கொலை செய்யப்பட்டார்? அவரது உடல் காணாமல்போன ஷஹ்ரபானின் காருக்குள் எப்படி வந்தது? ஷஹ்ரபான் சாகவில்லை என்றால் அவர் என்ன ஆனார்? என பல்வேறு கேள்விகள் எழுந்தன.

இதுப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தியும் எந்த துப்பும் துலங்கவில்லை. இதையடுத்து, இந்த வினோதமான வழக்கை விசாரிப்பது போலீசாருக்கு பெரும் சவாலாக மாறியது.

இந்த நிலையிம் சம்பவம் நடந்த 6 மாதத்துக்கு பிறகு இந்த வழக்கில் தற்போது துப்பு துலங்கியுள்ளது. மாயமான மாடல் அழகி ஷஹ்ரபான் இன்ஸ்டாகிராமில் பல போலி கணக்குகளை பயன்படுத்தி வந்தது சமீபத்தில்தான் போலீசாருக்கு தெரியவந்தது.

திடுக்கிடும் தகவல்கள்

அதுகுறித்து தீவிரமாக விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதன்விவரம் பின்வருமாறு:-

மாடல் அழகி ஷஹ்ரபான் குடும்ப பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க தான் இறந்துவிட்டதாக நாடகம் ஆட முடிவு செய்தார். அதற்கு தன்னை போலவே உருவ ஒற்றுமை கொண்ட பெண்ணை தேடி கொலை செய்து, தான் இறந்துவிட்டதாக பெற்றோரையும், போலீசாரையும் நம்ப வைக்க அவர் திட்டம் திட்டினார். இந்த சதியில் தனது காதலரையும் அவர் கூட்டு சேர்த்துக்கொண்டார்.

அவர்கள் இருவரும் ஷஹ்ரபானை போலவே உருவ ஒற்றுமை கொண்ட பெண்ணை தேடிவந்தனர். இதற்காக ஷஹ்ரபான் இன்ஸ்டாகிராமில் பல போலி கணக்குகளை தொடங்கி தன்னை போன்ற பெண்ணை தேடினார்.

அப்போதுதான் மாடல் அழகி கதீட்ஜா, ஷஹ்ரபானின் வலையில் சிக்கினார். கதீட்ஜாவுடன் இன்ஸ்டாகிராமில் சகஜமாக பேசி பழகிய ஷஹ்ரபான் அவருக்கு அவ்வப்போது அழகுசாதன பொருட்களை வழங்கி வந்தார்.

முகத்தை சிதைத்தார்

அப்படி ஒரு நாள் அழகு சாதன பொருட்களை தருவதாக கூறி கதீட்ஜாவை ஷஹ்ரபான் நேரில் அழைத்துள்ளார். அதை நம்பி சென்ற கதீட்ஜாவை ஷஹ்ரபான் மற்றும் அவரது காதலர் ஷேகிர் காரில் அழைத்து சென்றனர்.

அப்போது ஆள்நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் காருக்குள் வைத்து கதீட்ஜாவை இருவரும் குத்திக்கொலை செய்தனர். முகம் அடையாளம் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக ஷஹ்ரபான், கதீட்ஜாவின் முகத்தில் 50க்கும் மேற்பட்ட முறை கத்தியால் குத்தி முகத்தை சிதைத்தார். பின்னர் ஷஹ்ரபானும், அவரது காதலரும் காரை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு தலைமறைவாகினர்.

சினிமாவை மிஞ்சும் இந்த பதபதைக்கும் கொலை சம்பவம் நடந்து 6 மாதங்களுக்கு பிறகு தற்போதுதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனையடுத்து, ஷஹ்ரபானையும், அவரது காதலரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்