ஜி-7 மாநாட்டில் ரஷியா மீது அதிகமான பொருளாதார தடைகள் விதிக்க வாய்ப்பு..?
ஜி-7 மாநாட்டில் ரஷியா மீது அதிகமான பொருளாதார தடைகள் விதிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
பெர்லின்,
ஜெர்மனியில் ஜி-7 நாடுகள் மாநாடு இன்று தொடங்கியது. அதில் பங்கேற்க பிரதமர் மோடி ஜெர்மனி சென்றுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜாண்சன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் இதில் கலந்துகொள்கிறார்கள்.
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ஜி-7 மற்றும் நேட்டோ மாநாடுகளில் நாளை கலந்துகொள்வார்.முன்னதாக, ரஷியா மீது தங்கம் இறக்குமதி மீதான தடை அறிவிப்புடன் ஜி7 பேச்சுவார்த்தை தொடங்கியது.
முன்னதாக, இன்று அதிகாலை உக்ரைன் தலைநகர் கீவ் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கீவ் நகரத்தில் இரண்டு குடியிருப்புக் கட்டிடங்கள் தகர்க்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிகாலையில் தூங்கிக் கொண்டிருந்தபோது, ரஷிய ஏவுகணைகள் தாக்கியதில் படுகாயங்களுடன் ஏழு வயது சிறுமி உட்பட 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜி-7 மற்றும் நேட்டோ மாநாடுகள் நடைபெறுவதை முன்னிட்டு அழுத்தம் கொடுப்பதற்காகவே, ரஷியா பல வாரங்களுக்கு பின் மீண்டும் கீவ் நகரில் தாக்குதலை தொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று ஜி7 மாநாட்டில் பேசிய உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி குலேபா கூறியதாவது:-
""ஜி-7 மாநாட்டில் ரஷியா மீது அதிகமான பொருளாதார தடைகள் விதிக்க வேண்டும். உக்ரேனுக்கு அதிக ஆயுதங்கள் அளிக்க வேண்டும். ரஷியாவின் ஏகாதிபத்தியம் தோற்கடிக்கப்பட வேண்டும்" என்றார்.
இதனால், ஜி-7 மாநாட்டில் ரஷியா மீது அதிகமான பொருளாதார தடைகள் விதிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.