ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிராக பிரான்ஸ் மந்திரியின் சர்ச்சை கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு - பதவி விலக வலியுறுத்தல்!
மாற்றுப் பாலினத்தவர்களுக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் கருத்துக்களை தெரிவித்த பிரெஞ்சு மந்திரி பதவி விலக வேண்டுமென்ற அழுத்தம் அதிகரித்து வருகிறது.
பாரிஸ்,
ஓரினச்சேர்க்கை மற்றும் எல்.ஜி.பி.டி.க்யூ, மாற்றுப் பாலினத்தவர்களுக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் கருத்துக்களை தெரிவித்த பிரெஞ்சு மந்திரி பதவி விலக வேண்டுமென்ற அழுத்தம் அதிகரித்து வருகிறது.
பிரான்சின் 2013-சட்டம் ஓரினச்சேர்க்கை திருமணம் மற்றும் தத்தெடுப்பை அங்கீகரிக்கிறது. இந்த சட்டத்தை எதிர்ப்பது ஏன் என்று அந்நாட்டின் பிராந்திய உறவுகளுக்கான மந்திரியாக உள்ள கேயுக்ஸ்சிடம் இந்த வாரம் ஒரு நேர்காணலில் கேட்கப்பட்டது.
அப்போது பேசிய அவர், "அவர்கள் இயற்கைக்கு எதிரானவர்கள்" என்று விமர்சித்தார்.
இந்த கருத்து மாற்றுப் பாலினத்தவர், எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ.எ. சமூக மக்களிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. அவர் ராஜினாமா செய்ய வேண்டுமென கண்டனக்குரல் எழுந்தது. இத்தகைய பொது அவமதிப்புக்காக அவர் மீது சட்டப்பூர்வ புகார் பதிவு செய்யப்பட்டது.
இப்படி கடும் கண்டனம் எழுந்த நிலையில், தான் தவறாக சித்தரிக்கப்படுவதாக அவர் சொன்னார். "நான் எனது கருத்துப்படி நிற்கிறேன். அத்தகைய சட்டம் அங்கீகரிக்கப்பட்டால், நான் அதை நடைமுறைப்படுத்துவேன்.
"அந்த மக்கள் அனைவரிடமும் எனக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர், மேலும் நான் ஒரு நியாயமற்ற விசாரணையால் குறிவைக்கப்படுகிறேன். இது என்னை வருத்தப்படுத்துகிறது"என்று அவர் கூறினார்.
பின்னர் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்து அவர் டுவீட் செய்தார். தனது வார்த்தைகள் பொருத்தமற்றவை என்று கூறிய அவர், மன்னிப்பு கேட்டு, பாகுபாடு எதிர்ப்பு குழுக்களுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார்.