ஆப்கானிஸ்தான்: ஆயுதமேந்திய கும்பல் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் ஆயுதமேந்திய கும்பல் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 3 சுற்றுலா பயணிகள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.

Update: 2024-05-18 04:16 GMT

காபூல்,

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இருப்பினும் அங்கு அடிக்கடி ஆயுதமேந்திய கும்பல் தொடர்ந்து பல்வேறு விதமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக தற்கொலைப்படை தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் எதுவும் முழுமையாக இதுவரை பலன் அளிக்கவில்லை. இருப்பினும் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் பாமியான் மாகாணத்தில் நேற்று ஆயுதமேந்திய கும்பல் துப்பாக்கி சூடு நடத்தியது. இந்த துப்பாக்கி சூட்டில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 3 சுற்றுலா பயணிகள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 7-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தாலிபான்களின் செய்தித் தொடர்பாளர் அப்துல் மதீன் கானி, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், குற்றம் இழைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்பெயின் நாட்டு பிரதமர் பெட்ரோ சான்சேஸ், துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் பெரும் அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்