ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கு: மேலும் ஒரு போலீஸ் அதிகாரிக்கு சிறை தண்டனை
ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கில், கொலையில் பங்கு வகித்த குற்றத்துக்காக அலெக்சாண்டருக்கு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம் மினியாபொலிஸ் நகரில் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் 25-ந்தேதி ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தை சேர்ந்தவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் மடக்கி பிடித்தனர்.
அப்போது டெரெக் சாவின் என்ற போலீஸ் அதிகாரி ஜார்ஜ் பிளாய்ட்டை தரையில் தள்ளி அவரது கழுத்தில் கால் முட்டியை வைத்து பலமாக அழுத்தியதில் அவர் மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார். இதையடுத்து ஜார்ஜ் பிளாய்ட்டின் மரணத்துக்கு நீதி கேட்டு அமெரிக்கா முழுவதும் மாபெரும் போராட்டம் வெடித்தது.
இந்த சம்பவம் தொடர்பாக டெரெக் சாவின் உள்பட 4 போலீஸ் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டு அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதில் டெரெக் சாவின் மீதான கொலை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, அவருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பளித்தது.
இதனிடையே ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கில், அலெக்சாண்டர் குயெங் என்கிற மற்றொரு போலீஸ் அதிகாரி கடந்த அக்டோபர் மாதம் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அதை தொடர்ந்து நேற்று இந்த வழக்கில் நீதிபதி தனது தீர்ப்பை வழங்கினார். ஜார்ஜ் பிளாய்ட்டின் முதுகில் கால் முட்டியை வைத்து அழுத்தி அவரது கொலையில் பங்கு வகித்த குற்றத்துக்காக அலெக்சாண்டருக்கு 3½ ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.