இயான் புயலால் புளோரிடா கடும் பாதிப்பை சந்தித்துள்ளது: அதிபர் ஜோ பைடன்

இயான் புயலால் புளோரிடா மாகாணம் முழுவதும் கடும் துன்பத்தில் ஆழ்ந்துள்ளது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

Update: 2022-09-30 00:46 GMT

வாஷிங்டன்,

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை இயான் புயல் நேற்று முன்தினம் தாக்கியது. பல நகரங்களில் எங்கு பார்த்தாலும் ஒரே வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது. மணிக்கு 150 மைல் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியது.

இது தீவிரத்தின் உயர்ந்த நிலை என்று சொல்லப்படுகிறது. புயல் மீட்புப் பணிகளில் 7 ஆயிரம் ராணுவ வீரர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர் என புளோரிடா மாகாண கவர்னர் ரான் டி சாண்டிஸ் தெரிவித்தார். இந்தப் புயலின் விளைவாக புளோரிடா மாகாணத்தில் 22 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் இருளில் மூழ்கின.

இயான் புயலால் ஏற்பட்டுள்ள சேதத்தின் அளவு நிச்சயம் பேரழிவாக இருக்கும் என தேசிய புயல் மையத்தின் உயர் அதிகாரியான அந்தோணி ரெய்ன்ஸ் தெரிவித்தார். வெர்ஜீனியா, வட கரோலினா, தென் கரோலினா மாகாணங்களிலும் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. புதன், வியாழக்கிழமை என இரு நாட்களில் 4 ஆயிரம் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மொத்தத்தில் இந்தப்புயலால் புளோரிடா மாகாணமே நிலைகுலைந்து போய் உள்ளது. இந்நிலையில், இயன் சூறாவளியால் புளோரிடா மாகாணம் முழுவதும் கடும் துன்பத்தில் ஆழ்ந்துள்ளது என அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

இந்தச் சூறாவளியால் கணிசமான உயிர் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சுவதாக அவர் குறிப்பிட்டார். மேலும், புளோரிடாவின் வரலாற்றில் மிகக் கொடிய சூறாவளியாக இந்த புயல் உருவாகலாம் என்றும் கூறினார்.

 

Tags:    

மேலும் செய்திகள்