மெக்சிகோ: பேருந்து மீது டேங்கர் லாரி மோதி பயங்கர விபத்து - 18 பேர் பலி
மெக்சிகோவில் பேருந்து மீது டேங்கர் லாரி மோதி ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர்.
மெக்சிகோ சிட்டி,
வடக்கு மெக்சிகோவில், எரிபொருள் ஏற்றிக் கொண்டு சென்ற டேங்கர் லாரியும், பேருந்தும் மோதி ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மெக்சிகோவின் ஹிடால்கோ நகரில் இருந்து மான்டேரியை நோக்கி பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது நெடுஞ்சாலையில் எரிபொருள் ஏற்றிக்கொண்டு வந்த டேங்கர் லாரி ஒன்று பேருந்தின் மீது மோதியது.
இந்த விபத்தில் டேங்கர் லாரியில் இருந்த எரிபொருள் வெடித்து தீ பற்றியது. இதில் டேங்கர் லாரியும், பேருந்தும் தீ பிடித்து முழுவதுமாக எரிந்து நாசமானது. இந்த விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அதிகாலை ஏற்பட்ட இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணித்த 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். எனினும், டேங்கர் லாரி டிரைவர் உயிர்பிழைத்தாக கூறப்படுகிறது.
இந்த விபத்து குறித்து போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், இந்த விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.