குடியிருப்பு விசா காலாவதியானவர்களுக்கு... சொந்த ஊர் செல்ல அவகாசம் வழங்கிய அமீரகம்

பொதுமக்கள் தங்களது விசா தொடர்பான நிலைமையை சரியாக வைத்துக் கொள்ள இந்த நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது.

Update: 2024-08-01 14:06 GMT

கோப்புப்படம் 

துபாய்,

அமீரகத்தில் குடியிருப்பு விசா காலாவதியாகி தங்கியிருப்பவர்களுக்கு அபராதம் இன்றி நாட்டை விட்டு வெளியேற கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமீரக அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான மத்திய ஆணையம் கூறியிருப்பதாவது:-

குடியிருப்பு விசா காலாவதியான பின்னரும் அமீரகத்தில் தங்கியிருப்பவர்கள் தங்களது நிலையை மாற்றிக் கொள்ளும் வகையில் பொதுமன்னிப்பு வழங்கப்படுகிறது. மேலும் அவர்களுக்கு 2 மாத கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி அடுத்த மாதம் (செப்டம்பர்) 1-ந் தேதி முதல் இந்த பொதுமன்னிப்பு நடைமுறைக்கு வருகிறது.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி விசா விதிமீறலில் ஈடுபட்டவர்கள் அபராத தொகை எதுவும் இல்லாமல் சொந்த ஊருக்கு திரும்பி செல்லவும் வாய்ப்பு வழங்கப்படும். அமீரக அரசின் கருணை மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் பொதுமக்கள் தங்களது விசா தொடர்பான நிலைமையை சரியாக வைத்துக் கொள்ள இந்த நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது. இந்த பொதுமன்னிப்பு தொடர்பான விதிமுறைகளை குடியிருப்பு விசா விதிமீறலில் ஈடுபட்டவர்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது தொடர்பான விரிவான விதிமுறைகள் விரைவாக வழங்கப்படும்.

பொதுவாக குடியிருப்பு விசா காலம் முடிவடைந்தவர்கள் தங்களது விசாவை புதுப்பித்துக்கொள்ள 6 மாத காலம் சலுகை வழங்கப்படுகிறது. அதன் பின்னரும் விசாவை புதுப்பிக்காதவர்களது விசா காலாவதியானதாக கருதப்படும். எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்து தங்களது விசாவின் நிலையை முறைப்படுத்தி பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்