மனித மூளையில் 'சிப்': சோதனையை தொடங்கியது எலான் மஸ்கின் 'நியூராலிங்க்' நிறுவனம்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் குரங்குகளை வைத்து இந்த சோதனையை நியூராலிங்க் நிறுவனம் செய்திருந்தது.;
வாஷிங்டன்,
அமெரிக்காவைச் சேர்ந்த மிகப்பெரும் கோடீஸ்வரரான எலான் மஸ்கின் நியூராலிங்க் நிறுவனம், மூளையில் சிப்களைப் பொருத்தி, அவற்றை கணினிகளுடன் இணைப்பதன் மூலம் மனிதர்களின் பார்வை மற்றும் இயக்கத்தை மீட்டெடுக்க முடியும் எனக் கூறுகிறது. இதற்கான பணிகளை தொடங்கிய நியூராலிங்க் நிறுவனம் மனிதர்களிடம் சோதனை நடத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்திடம் அனுமதி கோரியது.
இதற்கான அனுமதி கிடைத்த நிலையில், மனித மூளைக்குள் சிப்பை பொருத்தி சோதனையை தொடங்கியிருக்கிறது. மூளைக்கும் கணினிக்குமான இன்டெர்பேஸ் (BCI) இணைப்பை உருவாக்கும் வகையிலான 'சிப்' மனிதனின் மூளையில் பொருத்தப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் குரங்குகளை வைத்து இந்த சோதனையை நியூராலிங்க் நிறுவனம் செய்திருந்தது. தற்போது முதன்முறையாக மனிதனுக்கு பொருத்தப்பட்டு சோதனை நடைபெறுகிறது. எலான் மஸ்க் இதனை அறிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த சோதனை தொடங்கியதாகவும், சிப் பொருத்தப்பட்டிருக்கும் அந்த நபர் உடல்நலன் தேறி வருவதாகவும் எலான் மஸ்க் கூறியிருக்கிறார்.
நரம்பியல் சிதைவு, ஆட்டிசம் பாதிப்பு மற்றும் மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பயனளிக்கும் நோக்கத்தில் இந்த திட்டம் செயல்படும் என்று எலான் மஸ்க் கூறியிருக்கிறார்.