ஆட்சி அமைக்கப்போவது யார்? பாகிஸ்தானில் தொடர்ந்து இழுபறி நீடிப்பு

பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் 8-ம் தேதி நடந்து முடிந்தது.

Update: 2024-02-09 22:53 GMT

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் 8-ம் தேதி நடந்து முடிந்துள்ள பொதுத் தேர்தலில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான்  தெஹ்ரீக்-ஏ-இன்சாப் (பிடிஐ) கட்சியின் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்று, தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றனர்.

பாகிஸ்தானில் மிகப் பெரிய கட்சிகளான முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் -நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சி இரண்டாவது இடத்திலும், முன்னாள் வெளியுறவுத் துறை மந்திரி பிலாவல் புட்டோ ஜர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) 3- ஆவது இடத்திலும் உள்ளன.

மொத்தமுள்ள 266 இடங்களுக்கு சுமார் 200 இடங்களில் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், பிடிஐ ஆதரவு சுயேச்சை வேட்பாளர்கள் சுமார் 70 இடங்களைக் கைப்பற்றியுள்ளனர். பிஎம்எல்-என் கட்சிக்கு 60 இடங்களும், பிபிபி கட்சிக்கு 40 இடங்களும் கிடைத்துள்ளன.

இம்ரான் கானின் செல்வாக்கு அதிகம் நிறைந்த கைபர் பக்துன்கவா மாகாணத்தில்தான் அவரது பிடிஐ கட்சி ஆதரவு வேட்பாளர்களுக்கு அதிக இடங்கள் கிடைத்துள்ளன.

இதுவரை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படாத பெரும்பாலான தொகுதிகளிலும் சுயேச்சை வேட்பாளர்களே முன்னிலை வகிப்பதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இருந்தாலும், அடுத்த ஆட்சியை அமைக்கப்போவது யார் என்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மொத்தம் 336 இடங்கள் இருக்கின்றன. இதில் 266 இடங்கள் மட்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவை. எஞ்சிய 70 இடங்கள் வெற்றி பெற்ற கட்சிகளின் பெரும்பான்மைக்கு ஏற்ப பகிர்ந்தளிக்கப்படும். ஒட்டுமொத்தமாக 169 இடங்களை கைப்பற்றும் கட்சியே ஆட்சி கட்டிலில் அமரும்.

இதனிடையே முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் நவாஸ் ஷெரீப் மற்றும் பிபிபி கட்சியின் இணைத்தலைவர் ஆசிப் அலி ஜர்தாரி ஆகியோர் நேற்று லாகூரில் ஒரு சந்திப்பை நடத்தியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்