இஸ்ரேல் மீது ஆளில்லா விமான தாக்குதல்; ராணுவ வீரர் பலி

இஸ்ரேல் மீது ஹிஜ்புல்லா அமைப்பினர் அடுத்தடுத்து ஆளில்லா விமான தாக்குதலை நடத்தியதில், ராணுவ வீரர் பலியாகி உள்ளார்.

Update: 2024-08-20 02:14 GMT

டெல் அவிவ்,

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் கொடூர தாக்குதல் நடத்தியதில், இஸ்ரேல் மக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர். பணய கைதிகளாக சிலர் சிறை பிடித்து செல்லப்பட்டனர்.

இதனை தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் இடையேயான மோதல் முற்றியுள்ளது. போர்நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டவர்களில் ஒரு சிலரை இஸ்ரேல் மீட்டது. எனினும், காசாவை இலக்காக கொண்டு இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர்.

பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஹிஜ்புல்லா பயங்கரவாத அமைப்பும் போரில் ஈடுபட்டு வருகிறது. லெபனான் நாட்டில் இருந்தபடி இஸ்ரேல் மீது ஹிஜ்புல்லா அமைப்பு அதிரடி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டதில், அடுத்தடுத்து பலர் கொலை செய்யப்பட்டனர்.

ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார். அடுத்து, ஹிஜ்புல்லா அமைப்பின் தளபதி புவாத் ஷுகர் என்பவரை இஸ்ரேல் தாக்கி படுகொலை செய்தது. இதனால் அந்த பகுதியில் பதற்றம் காணப்படுகிறது.

இந்த சூழலில், இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், மேற்கு கலிலீ பகுதியில் ஹிஜ்புல்லா அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலை சேர்ந்த மஹ்மூத் அமரியா (வயது 45) என்ற அதிகாரி பலியாகி உள்ளார். இப்தின் பகுதிக்குட்பட்ட பெடவுயின் நகரை சேர்ந்த அவர், ஆளில்லா விமான தாக்குதலில் உயிரிழந்து உள்ளார் என்று தெரிவித்து உள்ளது. இந்த தாக்குதலில் இஸ்ரேலின் மற்றொரு ராணுவ வீரரும் காயமடைந்து உள்ளார்.

லெபனான் நாட்டின் எல்லை பகுதியருகே 80 ஆயிரம் பேர் வரையிலான இஸ்ரேல் மக்கள் வசித்து வந்தனர். எனினும், கடந்த அக்டோபரில் ஹிஜ்புல்லா அமைப்பினர் ராக்கெட்டுகள் மற்றும் ஆளில்லா விமானங்களை கொண்டு தாக்குதலை நடத்தியது.

இஸ்ரேல் மக்கள் வீடு திரும்ப முடியாத அளவுக்கு இந்த தாக்குதலை தொடருவோம் என்றும் அந்த அமைப்பின் தலைவர்கள் கூறியிருந்தனர். இந்த தாக்குதலில், பொதுமக்களில் 26 பேரும், வீரர்களில் 19 பேரும் என 40-க்கும் மேற்பட்டோர் இஸ்ரேல் தரப்பில் கொல்லப்பட்டனர்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் 1701 ஒப்பந்தத்தின்படி, தெற்கு லெபனான் பகுதியில் இருந்து, ஆயுதங்களை விடுத்து வெளியேற வேண்டும் என ஹிஜ்புல்லா அமைப்பினரிடம் இஸ்ரேல் அதிகாரிகள் கேட்டு கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்