இங்கிலாந்து மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழா - லண்டனில் இன்று கோலாகலமாக நடைபெறுகிறது

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இன்று நடைபெறும் கோலாகல விழாவில் அந்த நாட்டின் மன்னராக சார்லஸ் முடிசூட்டப்படுகிறார்.

Update: 2023-05-06 00:32 GMT

Image Courtesy : AFP

லண்டன்,

இங்கிலாந்தை 70 ஆண்டுக்காலம் ஆட்சி செய்து வந்த ராணி 2-ம் எலிசபெத், கடந்த ஆண்டு செப்டம்பர் 8-ந் தேதி தன்னுடைய 96 வயதில் காலமானார். அதற்குப் பிறகு, ராணி 2-ம் எலிசபெத்தின் மூத்த மகனும், இளவரசருமான சார்லஸ் இங்கிலாந்தின் மன்னரானார். அவர் 3-ம் சார்லஸ் என்று அழைக்கப்படுகிறார்.

ராணியின் மறைவுக்கு பின்னர் மன்னராக சார்லஸ் அரியனை ஏறியபோதும், அவருக்கான அதிகாரப்பூர்வ முடிசூட்டு விழா நடைபெறாமலேயே இருந்து வந்தது. இந்த சூழலில் மே 6-ந் தேதி மன்னர் 3-ம் சார்லசின் முடிசூட்டு விழா நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது.

கடைசியாக கடந்த 1953-ம் ஆண்டு ராணி 2-ம் எலிசபெத்தின் முடிசூட்டு விழா மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. அதன் பிறகு, 70 ஆண்டுகள் கழித்து தற்போது அந்த பாரம்பரிய விழா நடக்கிறது. லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் இன்று (சனிக்கிழமை) இந்த விழா கோலாகலமாக நடக்கிறது. இதையொட்டி ஒட்டுமொத்த இங்கிலாந்தும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

இந்த பாரம்பரிய விழா பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து வெஸ்ட்மின்ஸ்டர் அபே வரையிலான ஊர்வலத்துடன் தொடங்கும். மன்னர் சார்லசும், ராணி கமிலாவும் குளிர்சாதன வசதியும், மின்சாரத்தால் இயங்கும் ஜன்னல்களும் கொண்ட சிறிய சாரட் வண்டியில் பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்துக்கு ஊர்வலமாக அழைத்து செல்லப்படுவர்.

உள்ளூர் நேரப்படி காலை 11 மணிக்கு மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா தேவாலயத்துக்குள் நுழைந்தவுடன் விழா தொடங்கும். 700 ஆண்டு கால பழமையான இருக்கையின் பின்னால் நின்று கொண்டு, கேன்டர்பரி ஆர்ச்பிஷப், அரசரை அங்கீகரித்து ஒரு அறிவிப்பை வெளியிடுவார். அப்போது, ''கடவுளே மன்னரை காப்பாற்று!'' என அனைவரும் முழக்கங்களை எழுப்புவார்கள். ராணுவ இசை மற்றும் வாத்திய கருவிகள் முழங்கும்.

அதை தொடர்ந்து சட்டத்தையும், இங்கிலாந்து தேவாலயத்தையும் காப்பதாக மன்னர் 3-ம் சார்லஸ் உறுதிமொழி எடுப்பார். பின்னர் மன்னர் அந்த இருக்கையில் அமரவைக்கப்பட்டு அவரது வழக்கமான ஆடைகள் அகற்றப்படும். அப்போது பார்வையாளர்களிடம் இருந்து தங்கஇழைகளால் தயாரிக்கப்பட்ட திரைமூலம் அவரை மறைத்து, அவரது தலை, உடல் பகுதியில் புனித எண்ணெய் தேய்த்து அபிஷேகம் செய்வர். இது மன்னருக்கென்றே சிறப்பாக தயாரிக்கப்படும் எண்ணெய் ஆகும்.

பின்னர் மன்னரிடம் மதம் மற்றும் அரச குடும்பத்தின் அதிகாரத்தை அளிக்கும் வகையில் அரச குடும்ப புனித உருண்டை அளிக்கப்பட்டு, அரசு அதிகாரங்களை அளிக்கும் செங்கோல் வழங்கப்படும். இறுதியாக ஆர்ச் பிஷப் மன்னரின் தலையில் புனித எட்வர்ட்டின் கிரீடத்தைச் சூட்டுவார்.

அதனை தொடர்ந்து முடிசூட்டும் இருக்கையிலிருந்து எழுந்து அரியணையை நோக்கி மன்னர் செல்வார். அங்கு அவருக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டு அரியணையில் அமரவைக்கப்படுவார். பின்னர் இதே போல் அரசரின் மனைவி கமீலாவுக்கும் சடங்குகள் நடத்தப்பட்டு, அவரது தலையிலும் கிரீடம் சூட்டப்படும்.

பின்னர் மன்னரும், ராணியும் தங்க முலாம் பூசப்பட்ட பாரம்பரிய சாரட் வண்டியில் ஊர்வலமாக சென்று மீண்டும் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு திரும்புவார்கள். இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உலக நாடுகளின் தலைவர்கள், இங்கிலாந்திலுள்ள தொண்டு நிறுவனங்கள், சமூக குழுக்களைச் சேர்ந்தவர்கள் என சுமார் 2 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி `பிரிட்டிஷ் பேரரசு பதக்கம்' பெற்ற 850 தன்னார்வலர்கள் விழாவில் பங்கேற்கிறார்கள். இந்தியா சார்பில் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் முடிசூட்டு விழாவில் பங்கேற்கிறார். அதேபோல் இவ்விழாவில் அமெரிக்காவின் சார்பில் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு பதில் அவரது மனைவி ஜில் பைடன் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே முடிசூட்டு விழாவில் தீவிர பங்களிப்பை வழங்கும் இங்கிலாந்து ஆயுதப்படை வீரர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு மன்னர் சார்லசின் நன்றி பரிசாக பதக்கங்கள் வழங்கப்படும் என பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

இதற்காக சுமார் 4 லட்சம் சிறப்பு முடிசூட்டு விழா பதக்கங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், பதக்கத்தின் முன்பக்கத்தில் மன்னர் சார்லஸ், ராணி கமிலாவின் இரட்டை உருவப்படம் பொறிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்