கொரோனா கட்டுப்பாடுகள்: சீனாவில் மீண்டும் வெடித்தது போராட்டம்

கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக சீனாவில் மீண்டும் போராட்டம் வெடித்தது

Update: 2022-11-30 22:55 GMT

பீஜிங்,

சீனாவின் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு விதித்துள்ள கடுமையான கட்டுப்பாடுகளால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் கடந்த 24-ந் தேதி போராட்டத்தில் குதித்தனர்.

ஜின்ஜியாங் மாகாணத்தின் தலைநகர் உரும்கியில் தொடங்கிய இந்த போராட்டம் நாடு முழுவதும் பரவி தீவிரமடைந்தது. கடந்த 28-ந் தேதி வரை தலைநகர் பீஜிங், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் தொடர் போராட்டங்கள் நடந்து வந்தன.

ஆனால் நேற்று முன்தினம் போராட்டம் தீவிரமாக இருந்து வந்த அனைத்து நகரங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டதால் போராட்டம் முடங்கியது. நேற்று முன்தினம் சீனாவின் எந்த பகுதியிலும் போராட்டம் நடக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தின் தலைநகரான குவாங்சூ நகரில் கொேரானா கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராடிய நிலையில் அவர்களை கலைக்க போலீசார் முற்பட்டபோது இருதரப்புக்கும் இடையில் மோதல் வெடித்தது.

போராட்டக்காரர்கள் கண்ணாடி பாட்டில்கள் உள்ளிட்டவற்றை போலீசார் மீது வீசி எறிந்தனர். அதை தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தியதாகவும், பலர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்