பயண கட்டுப்பாட்டு விதிகளை தளர்த்தியது தாய்லாந்து; சுற்றுலாவாசிகள் மகிழ்ச்சி

தாய்லாந்து நாட்டில் கொரோனா பரவல் குறைந்த நிலையில், பயண கட்டுப்பாட்டு விதிகளை தளர்த்தி அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

Update: 2022-06-17 10:23 GMT



பாங்காக்,



உலக நாடுகளில் சுற்றுலாவாசிகளின் விருப்பமுள்ள நாடுகளில் ஒன்றாக தாய்லாந்து திகழ்கிறது. கடந்த 2019ம் ஆண்டில் அந்நாட்டிற்கு வெளிநாட்டு சுற்றுலாவாசிகள் 4 கோடி பேர் வருகை தந்தனர்.

ஆனால், அடுத்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று பரவலால் இந்த எண்ணிக்கை சரிவடைய தொடங்கியது. கடந்த ஆண்டில், 2019ம் ஆண்டில் வருகை புரிந்த சுற்றுலாவாசிகளின் எண்ணிக்கையில் ஒரு சதவீதத்தினரே வந்துள்ளனர். இத்தனைக்கும், கொரோனா விதிகள் பெருமளவில் தளர்த்தப்பட்டு இருந்தன.

அந்நாட்டில் கொரோனா பெருந்தொற்றால் மொத்தம் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்து உள்ளனர். எனினும், அதில் இருந்து அந்நாடு மீண்டு வந்துள்ளது. இதுவரை 80 சதவீதத்தினர் தடுப்பூசி போட்டு உள்ளனர்.

இந்நிலையில், சுற்றுலாவாசிகளை வரவேற்கும் வகையில் கொரோனா விதிகளில் இன்று தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அவற்றில் இறுதியாக நடைமுறையில் இருந்த, கடுமையாக விமர்சிக்கப்பட்ட, பயணத்திற்கு முன்பதிவு செய்ய வேண்டும் என்ற விதி தளர்த்தப்பட்டு உள்ளது.

கொரோனா பரவல் குறைந்த சூழலில், பொது இடங்களில் முக கவசம் அணிவதும் அவசியமில்லை என இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

வருகிற ஜூலை 1ந்தேதி முதல் இந்த தளர்வுகள் நடைமுறைக்கு வரவுள்ளன. இதுவரை, தாய்லாந்து அதிகாரிகளிடம் அந்நாட்டுக்கு பயணம் செய்வதற்கு முறைப்படி முன் அனுமதி வாங்க வேண்டியது கட்டாயம் என விதிகள் இருந்தன.

இந்த தளர்வு அறிவிப்பினை தாய்லாந்து கலாசார மந்திரி பிபத் ரச்சகித்பிரகான் அறிவித்து உள்ளார். இதனால், தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ், மருத்துவ பரிசோதனை செய்ததற்கான சான்றிதழ், மருத்துவ காப்பீடு, ஓட்டல் அறை முன்பதிவு உள்ளிட்ட பல ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் சுற்றுலாவாசிகளுக்கு இனி இருக்காது.

Tags:    

மேலும் செய்திகள்