அமெரிக்காவில் குளிர் காலத்தில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் - ஜோ பைடன் எச்சரிக்கை
பழைய தடுப்பூசி அல்லது முந்தைய கொரோனா தொற்று அதிகபட்ச பாதுகாப்பை அளிக்காது என ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
வாஷிங்டன்,
கொரோனா வைரஸ் தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரசின் தாக்கம் அங்கு தீவிரமாக உள்ளது. குறிப்பாக கொரோனாவால் நிகழும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில் ஒமைக்ரான் வைரஸ் தொற்றை எதிர்கொள்ளும் வகையில் புதுப்பிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோசை ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று முன்தினம் செலுத்தி கொண்டார்.
அதைத்தொடர்ந்து அவர் பேசுகையில், "இந்த வைரஸ் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. அமெரிக்காவிலும் உலகெங்கிலும் புதிய மாறுபாடுகள் தோன்றியுள்ளன. உங்கள் பழைய தடுப்பூசி அல்லது உங்கள் முந்தைய கொரோனா தொற்று உங்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பை அளிக்காது.
அமெரிக்காவில் போதுமான மக்கள் கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோசை பெறவில்லை. வானிலை குளிர்ச்சியாகி வருகிறது. மக்கள் வீட்டிற்குள் அதிக நேரம் செலவிடுவார்கள்.
எனவே கொரோனா போன்ற தொற்று வைரஸ்கள் கணிசமாக எளிதாக பரவும். நாட்டில் ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 400 பேர் கொரோனாவால் இறக்கின்றனர். இந்த குளிர்காலத்தில் அந்த எண்ணிக்கை இன்னும் உயர வாய்ப்புள்ளது" என எச்சரித்தார்.