இலங்கையில் தொடரும் துயரம்; எரிபொருள் நிரப்ப 5 நாள் வரிசையில் காத்திருந்த லாரி ஓட்டுனர் உயிரிழப்பு

இலங்கையில் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் 5 நாட்களாக வரிசையில் காத்திருந்த லாரி ஓட்டுனர் உயிரிழந்து உள்ளார்.

Update: 2022-06-23 15:29 GMT



கொழும்பு,



இலங்கை விடுதலை பெற்ற பின்னர் இதுவரை சந்தித்திராத பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. அந்நாட்டில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்த எரிபொருள் தட்டுப்பாட்டால் மின் உற்பத்தி பாதிப்பு, போக்குவரத்து முடக்கம் போன்ற சிரமங்கள் ஏற்பட்டு உள்ளன.

கடுமையான எரிபொருள் பற்றாக்குறையை சந்தித்து வரும் இலங்கைக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் பெட்ரோல், டீசல் அனுப்பி வருகின்றன. ஆனாலும் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் இலங்கை தவித்து வருகிறது. அங்கு பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்கள் மற்றும் கியாஸ் நிரப்பும் நிலையங்களில் போதிய அளவுக்கு இருப்பு இல்லாததால் மக்கள் நீண்ட வரிசையில் நாள் கணக்கில் காத்திருக்கும் நிலை உருவாகி உள்ளது. இவ்வாறு காத்திருப்போர் உயிரிழக்கும் சூழலும் காணப்படுகிறது.

இலங்கையின் மொத்த வெளிநாட்டு கடன் 5,100 கோடி அமெரிக்க டாலராக உள்ளது. இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாட்டினால் ஏற்பட்ட போக்குவரத்து வசதியின்மையால் அனைத்து பள்ளிகளுக்கும் வெள்ளி கிழமை விடுமுறை அறிவிப்பு வெளியானது. இது கடந்த 17ந்தேதி முதல் தொடங்கியது. அடுத்த 3 மாதங்களுக்கு இந்த நடைமுறை தொடரவுள்ளது. அந்த நாளில் அரசு ஊழியர்கள், வரவிருக்கிற உணவு நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில், உணவை பெருக்க வேளாண் பணிகளில் ஈடுபட ஊக்கப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இதுபோன்ற சூழலில், இலங்கையின் மேற்கு மாகாணத்தில் இலங்கையில் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் 5 நாட்களாக வரிசையில் காத்திருந்த லாரி ஓட்டுனர் (வயது 63) உயிரிழந்து உள்ளார்.

அங்குருவடோடா பகுதியில் தனது வாகனத்தில் வரிசையில் காத்திருந்த அவர், உயிரிழந்து உள்ளார். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்து உள்ளது. அவர்கள் அனைவரும் 43 முதல் 84 வயதுக்கு உட்பட்டவர்கள். அவர்களில் பலருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்