அமெரிக்காவில் தொடரும் அதிர்ச்சி: இந்திய மாணவர் மீது கொடூர தாக்குதல்; மற்றொரு மாணவர் மரணம்

அமெரிக்காவில் 2024-ம் ஆண்டில் இந்திய மாணவர்கள் தொடர்புடைய சம்பவங்கள் நடைபெறுவது இது 6-வது முறை ஆகும்.

Update: 2024-02-07 10:37 GMT

நியூயார்க்,

அமெரிக்காவில் நடப்பு ஆண்டில் இந்திய மாணவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2024-ம் ஆண்டு தொடங்கி 2 மாதங்கள் கூட நிறைவடையாத சூழலில், பல்வேறு பகுதிகளிலும் இந்திய மாணவர்கள் பலரின் மரணம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில், வர்த்தக படிப்பு படித்து வந்த ஸ்ரேயாஸ் ரெட்டி பெனிகர் (வயது 19) என்பவர் கடந்த வாரம் மர்ம மரணம் அடைந்து கிடந்துள்ளார். எனினும், இதில் சந்தேகப்படும்படி எதுவும் இல்லை என உள்ளூர் போலீசார் தெரிவித்தனர்.

இதேபோன்று, இண்டியானா மாகாணத்தில், பர்டியூ பல்கலைக்கழக மாணவரான நீல் ஆச்சாரியா என்ற மற்றொரு இந்திய மாணவர் கடந்த ஜனவரி 28-ந்தேதி காணாமல் போனார். அதன்பின் சில நாட்களில் அவர் மரணம் அடைந்து விட்டார் என தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன் கடந்த ஜனவரி 16-ந்தேதி ஜார்ஜியா மாகாணத்தின் லித்தோனியா நகரில் எம்.பி.ஏ. படித்து வந்து மாணவர் விவேக் சைனி (வயது 25) என்பவர், போதை ஆசாமி ஒருவரால் கொடூர முறையில் சுத்தியலால் அடித்து கொல்லப்பட்டார். பணிபுரிந்து வந்த கடையில், தங்க அடைக்கலம் கொடுத்த சைனியை, பதிலுக்கு அந்த நபர், 50-க்கும் மேற்பட்ட முறை சுத்தியலால் தாக்கியுள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே சைனி உயிரிழந்து விட்டார்.

இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த அகுல் பி. தவான் (வயது 18) என்பவர் கடந்த மாதம் உயிரிழந்து கிடந்துள்ளார். அவருக்கு உடல் வெப்ப இழப்பு என்ற ஹைப்போதெர்மியா பாதிப்புகளுக்கான அறிகுறிகள் இருந்துள்ளன.

இந்நிலையில், மற்றொரு அதிர்ச்சி தரும் சம்பவம் நடந்துள்ளது. இதில், சமீர் காமத் (வயது 23) என்ற இந்திய மாணவர் வாரன் கவுன்டி பகுதியில் கடந்த திங்கட்கிழமை உயிரிழந்து கிடந்துள்ளார்.

அவர் பர்டியூ பல்கலைக்கழகத்தில் இயந்திரவியல் பொறியியலுக்கான முனைவர் படிப்பு படித்து வந்துள்ளார். அவர் உயிரிழந்த தகவலை அந்த துறையின் தலைவர் எக்கார்டு கிரால் நேற்று வெளியிட்டார்.

இதேபோன்று, இந்தியரான சையத் மஜாகீர் அலி என்ற ஐ.டி. மாணவர் ஒருவர் சிகாகோ நகரில் கடந்த 4-ந்தேதி மர்ம நபர்களால் துரத்தி, துரத்தி தாக்கப்பட்டார்.

அவருடைய வீடு அருகே நடந்து சென்றபோது, 3 பேர் அவரை விரட்டியுள்ளனர். இதில், மூக்கு, முகம் உள்பட பல இடங்களில் ரத்த காயங்கள் ஏற்பட்டு உள்ளன. இதுபற்றி வீடியோக்களும் சமூக ஊடகத்தில் வெளிவந்துள்ளன. இண்டியானா வெஸ்லியான் பல்கலைக்கழகத்தில் ஐ.டி. பிரிவில் முதுநிலை படிப்பை அலி படித்து வந்துள்ளார்.

ஐதராபாத் நகரை சேர்ந்த அலி, அமெரிக்கா தன்னுடைய கனவு நாடு என கூறியுள்ளார். இதுபற்றி அலியின் மனைவி சையீடா ருக்கியா பாத்திமா ரஜ்வி, மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கரை தொடர்பு கொண்டு உதவிடும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

சிகாகோவில் உள்ள இந்திய தூதரகம் அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளது என தெரிவித்தது. விசாரணை செய்து வரும் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பிலும் இருந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்