டெல்லி, பெல்கிரேடு இடையே விமான சேவை பற்றி ஜனாதிபதி முர்முவுடன் ஆலோசனை: செர்பிய அதிபர் பேட்டி

டெல்லி மற்றும் பெல்கிரேடு இடையே நேரடி விமான சேவை இயக்குவது பற்றி ஜனாதிபதி முர்முவுடன் ஆலோசனை மேற்கொண்டேன் என செர்பிய அதிபர் கூறியுள்ளார்.

Update: 2023-06-08 16:44 GMT

பெல்கிரேடு,

இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு சூரிநாம் மற்றும் செர்பியா ஆகிய இரு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இதன்படி, சூரிநாமில் கடந்த 4-ந்தேதி முதல் 6-ந்தேதி வரையிலான அவரது சுற்றுப்பயணம் நிறைவடைந்ததும், நேற்று காலை செர்பியாவுக்கு புறப்பட்டார்.

அவர், செர்பியாவின் பெல்கிரேடு நகரில் உள்ள நிகோலோ டெஸ்லா விமான நிலையத்தில் நேற்று மாலை விமானத்தில் சென்றிறங்கினார். இதன்பின், செர்பியாவின் காந்திஜீவா சாலையில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அவருடன், அந்நாட்டு தொழிலாளர் துறை மந்திரி நிகோலா செலாகோவிச் மற்றும் பெல்கிரேடு மேயர் அலெக்சாண்டர் சாலிக் ஆகியோரும் உடன் இருந்தனர். செர்பிய அதிபர் அலெக்சாண்டர் உசிச் அழைப்பின்பேரில் அந்நாட்டுக்கு சென்றுள்ள ஜனாதிபதி முர்மு வருகிற 9-ந்தேதி வரை அந்நாட்டில் இருப்பார்.

செர்பியாவில் அந்நாட்டு பிரதமர் அனா பிரனாபிக்கை, ஜனாதிபதி முர்மு இன்று சந்தித்து பேசினார். அவருடன் ஒன்றாக மதிய உணவு சாப்பிட்டார். பின்பு, செர்பிய அதிபர் அலெக்சாண்டர் உசிச் உடன் இன்று சந்தித்து பேசினார்.

இதில் இரு நாடுகளின் குழுவினர் இடம் பெற்றிருந்தனர். இந்த சந்திப்பில் இரு நாட்டு தலைவர்களும், நாடுகளின் இருதரப்பு உறவின் முக்கிய நோக்கங்களை பற்றி விவாதித்தனர்.

அவற்றுடன், சர்வதேச மற்றும் மண்டல அளவிலான விவகாரங்கள் பற்றிய பொதுவான விருப்பங்களை பற்றியும் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.

இதன்பின் கூட்டாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் செய்தியாளர்களிடம் பேசிய செர்பிய அதிபர் அலெக்சாண்டர் உசிச், டெல்லி மற்றும் பெல்கிரேடு இடையே நேரடி விமான சேவையை இயக்குவது பற்றி ஜனாதிபதி முர்முவுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இந்தியாவுடனான விசா நடைமுறையை எளிமையாக்குவோம். பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பு பற்றியும் நாங்கள் ஆலோசனை மேற்கொண்டோம் என அவர் கூறியுள்ளார்.

செர்பியாவில் இருந்து 2008-ம் ஆண்டு கொசோவோ விடுதலை பெற்று விட்டது என அறிவித்து கொண்டது. எனினும், இதனை இந்தியா அங்கீகரிக்கவில்லை. கடந்த வாரம் கொசோவோவில் நடந்த தேர்தலில் அல்பேனிய மேயர்களை நியமித்ததற்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. இந்த சூழலில், ஜனாதிபதி முர்முவின் செர்பிய பயணம் அமைந்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்