சிறிய ஆயுத உற்பத்தி ஆலையை நிறுவ இந்தியாவுடன் ஆலோசனை: இலங்கை அறிவிப்பு
இந்தியாவிடம் இருந்து கற்று கொள்வதற்கும், எடுத்து கொள்வதற்கும் நிறைய இருக்கிறது என இலங்கைக்கான பாதுகாப்பு துறை இணை மந்திரி தென்னகூன் கூறியுள்ளார்.;
கொழும்பு,
இந்தியாவின் தெற்கே அமைந்த அண்டை நாடான இலங்கையில் சில ஆண்டுகளுக்கு முன் பொருளாதார மந்தநிலை, விலைவாசி உயர்வு, எரிபொருள் பற்றாக்குறை போன்றவற்றால் மக்கள் போராட்டம் வெடித்தது. இந்தியா போன்ற நாடுகள் இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டின.
இந்த சூழலில், இலங்கையில் புதிய அரசு அமைந்து நிலைமை, மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்நிலையில், இலங்கைக்கான பாதுகாப்பு துறை இணை மந்திரி பிரேமிதா பண்டார தென்னகூன் செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, இலங்கையில் சிறிய ஆயுதங்களை உற்பத்தி செய்வதற்கான தொழிற்சாலையை அமைப்பதற்காக இந்தியாவுடன் நாங்கள் ஆலோசனை செய்து வருகிறோம்.
இதற்காக இந்திய பாதுகாப்பு துறை மந்திரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறோம். இந்தியாவிடம் இருந்து கற்று கொள்வதற்கும், எடுத்து கொள்வதற்கும் என நிறைய இருக்கிறது.
அதனால், ராணுவ தொழிற்சாலைக்கான ஒரு கூட்டு முயற்சியை மேற்கொள்வதற்கான அதுபோன்ற ஆலோசனைகள் நடந்து வருகின்றன என்று அவர் கூறியுள்ளார்.
கடந்த ஏப்ரலில், கொழும்பு நகரில் இந்தியா மற்றும் இலங்கை இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான 2-வது கருத்தரங்கம் நடந்தது. இதனை தொடர்ந்து, இந்நடவடிக்கை பற்றிய தகவல் வெளிவந்துள்ளது.
இதேபோன்று, கொழும்பு நகருக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா கூறும்போது, நவீன சாதனங்கள், நவீன தொழில் நுட்பங்கள் மற்றும் உலக தரம் வாய்ந்த சாதனங்களை இன்றைய தினம் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் அறிமுகப்படுத்தி வருகிறது.
அவற்றில் போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களில் இருந்து கடற்படை கப்பல்கள் வரை, மின்னணு போர் சாதனங்களில் இருந்து இணையதள பாதுகாப்புக்கான தீர்வுகள் வரை மற்றும் சிறிய ஆயுதங்களில் இருந்து பெரிய ரக நீண்டதொலைவை தாக்கும் பீரங்கி சாதனங்கள் வரை என சிலவற்றை குறிப்பிடலாம் என்றார்.
இலங்கை போன்ற நம்முடைய நட்பு நாடுகளுக்கு இந்த உபகரணங்களை கிடைக்க செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.