கஜகஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் தீ விபத்து - 42 பேர் உயிரிழப்பு
மீத்தேன் வாயு கசிவால் நிலக்கரி சுரங்கத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அஸ்தானா,
மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான கஜகஸ்தானின் காரகண்டா பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான நிலக்கரி சுரங்கம் அமைந்துள்ளது. இந்த நிலக்கரி சுரங்கத்தில் எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது 250-க்கும் மேற்பட்டோர் அங்கு பணியில் இருந்துள்ளனர்.
இந்த விபத்தில் 42 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து, தீ விபத்து குறித்து விசாரணை நடத்த கஜகஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. மீத்தேன் வாயு கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த துயர சம்பவத்தை தொடர்ந்து கஜகஸ்தானில் நேற்றைய தினம் தேசிய துக்க நாளாக அனுசரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.