சீனாவில் திருமணமாகாதவர்கள் சட்டப்பூர்வமாக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள அனுமதி

சீனாவில் திருமணமாகாதவர்கள் சட்டப்பூர்வமாக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.;

Update:2023-01-31 02:23 IST

கோப்புப்படம்

பீஜிங்,

சீனாவில் சமீப ஆண்டுகளாக குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிந்து வருகிறது. மேலும் அங்கு பிறப்பு விகிதத்தை விட இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவில் மக்கள் தொகை சரிந்துள்ளது.

எனவே நாட்டில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீன அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் அங்கு பல ஆண்டுகளாக அமலில் இருந்த ஒரே குழந்தை கொள்கையை கடந்த 2016-ம் ஆண்டு அரசு தளர்த்தியது. மேலும், கடந்த ஆண்டு முதல் தம்பதிகள் 3 குழந்தைகளைப் பெறவும் அந்த நாடு அனுமதி வழங்கியது. இருந்தபோதிலும் சீனாவில் பிறப்பு விகிதம் வீழ்ச்சியைதான் கண்டு வருகிறது.

இந்த நிலையில் சீனாவின் தென்மேற்கு மாகாணமான சிச்சுவானில் திருமணமாகாதவர்கள் சட்டப்பூர்வமாக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள மாகாண அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் குழந்தைப் பெற்று கொள்வதில் திருமணமான தம்பதிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வரும் சலுகைகள், மானியங்கள் போன்றவை இனி திருமணமாகாத தம்பதிகளுக்கும் கிடைக்கும்.

இந்த புதிய விதிமுறைகள் வருகிற 15-ந் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும், திருமணமானவர்கள் மற்றும் ஆகாதவர்கள் எவ்வளவு குழந்தைகளை வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் கூறினர். மாகாணத்தில் சமீப ஆண்டுகளில் திருமணம் மற்றும் பிறப்பு விகிதங்கள் மிகவும் குறைந்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

சிச்சுவான், சீனாவின் 5-வது அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணம் என்பதும், மக்கள்தொகையில் 21% க்கும் அதிகமானவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்ற அடிப்படையில் சீனாவில் இந்த மாகாணம் 7-வது இடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்