நபிகள் நாயகம் குறித்த சர்ச்சை: வெவ்வேறு மதங்கள் ஒருவரையொருவர் மதிக்க வேண்டும் - சீனா கருத்து

இந்த விவகாரத்தில் சீனா இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இந்த விவகாரம் சுமூகமாக ஒரு முடிவுக்கு வரும் என்று நம்புவதாக கூறியுள்ளது.

Update: 2022-06-13 15:19 GMT

பீஜிங்,

பாஜக தேசிய செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, சமீபத்தில் நபிகள் நாயகம் குறித்து பேசிய சம்பவம் பெரும் சர்ச்சையானது.

அதேபோல் நவீன் ஜிந்தால் தனது டுவிட்டர் பதிவில் நபிகள் குறித்து சர்ச்சை கருத்தை பதிவிட்டிருந்தார். உலகளவில் இஸ்லாமிய நாடுகள் பலவும் இதுகுறித்து இந்தியாவிற்கு கண்டனம் தெரிவித்த நிலையில், இந்தியாவும் பதில் விளக்கம் அளித்தது.

இந்நிலையில் முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பாஜக செய்தித் தொடர்பாளர்கள் நுபுர் சர்மா மற்றும் நவீன் குமார் ஜிந்தால் ஆகிய இருவரை நீக்கம் செய்து பாஜக அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அவர்கள் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நுபுர் சர்மாவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. சில பகுதிகளில் வன்முறைகளும் வெடித்தன. இது சர்வதேச அளவில் சர்ச்சையை கிளப்பியது.

இப்போது இந்த விவகாரத்தில் சீனாவும், இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால், இந்த விவகாரம் சுமூகமாக ஒரு முடிவுக்கு வரும் என்று நம்புவதாக கூறியுள்ளது.

சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் இன்று செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, "வெவ்வேறு நாகரிகங்கள், வெவ்வேறு மதங்கள் ஒருவரையொருவர் மதிக்க வேண்டும் மற்றும் சமமான நிலையில் இணைந்து வாழ வேண்டும் என்று சீனா நம்புகிறது. இந்த விவகாரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.

சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில், உய்குர் முஸ்லிம் சமூக மக்களுக்கு எதிரான இனப்படுகொலைகளை அந்நாட்டு அரசு நிகழ்த்தி வருவதாக மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில், நபிகள் நாயகம் விவகாரத்தில் சீனா கருத்து தெரிவித்திருப்பது முரணாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்