குறைத்து மதிப்பிட வேண்டாம்; தைவான் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

எங்களின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு விவகாரத்தை பொறுத்தவரை எந்த சமரசத்திற்கும் சலுகைக்கும் இடம் கிடையாது என சீனா தெரிவித்துள்ளது.

Update: 2022-05-23 10:39 GMT

பெய்ஜிங்,

சீனாவில் கடந்த 1949-ல் நடந்த உள்நாட்டு போருக்கு பிறகு தைவான் தனி நாடாக உருவானது. ஆனாலும் தைவான் தங்கள் நாட்டின்ஒருங்கிணைந்த பகுதி என அதிபர் ஜின்பிங் தலைமையிலான சீன அரசு கூறி வருகிறது. அதுமட்டும் இன்றி தேவை ஏற்பட்டால் தைவானை கைப்பற்ற, படை பலத்தை பயன்படுத்த தயங்கமாட்டோம் எனவும் சீனா கூறி வருகிறது. மேலும், தைவானின் வான் எல்லைக்குள் அவ்வப்போது சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்து மிரட்டல் விடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளது.

இந்த நிலையில், டோக்கியோவில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், "தைவான் மீது சீனா படை எடுத்தால் தைவானை அமெரிக்கா பாதுகாக்கும் என்றார். மேலும், தைவானை வலுக்கட்டாயமாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் சீன முயற்சிக்கு எதிராக அமெரிக்கா இராணுவ ரீதியில் தலையிடுமா என ஜோ பைடன்-யிடம் கேள்வி எழுப்பிய போது அவர், " அது தான் எங்களின் முடிவு" என அவர் தெரிவித்தார்.

தைவான் விவகாரத்தில் ஜோ பைடன் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ள சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறியதாவது:- தைவான் சீன பிராந்தியத்தில் இருந்து பிரிக்க முடியாத ஒரு பகுதியாகும். தைவான் விவகாரம் முற்றிலும் சீனாவின் உள் விவகாரம்.

சீனாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு விவகாரத்தை பொறுத்தவரை எந்த சமரசத்திற்கும் சலுகைக்கும் இடம் கிடையாது. தேசிய இறையாண்மையை பாதுகாக்க சீன மக்கள் கொண்டுள்ள உறுதித்தன்மையை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம். தன்னாட்சி பிராந்தியமாக உள்ள தைவானை நாங்கள் ஒருபோதும் கட்டுப்படுத்தியதில்லை. கண்டிப்பாக ஒருநாள் அதை கைப்பற்றுவோம். தேவையேற்பட்டால் படைகள் மூலம் அது நடக்கும்" என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்